தொடர்ந்து 8வது நாளாக மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி முதல் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.அதன் தொடர்ச்சியாக 8வது நாளாக நேற்று சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லாக்மா நகரில், கொரோனா தடுப்பூசி மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கர பக்தன் தெரு, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மழை நீரினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், மாதவரம் நெடுஞ்சாலை கமலாம்பாள் திருமண மண்டபம், வி.வி.நகர் மெயின் ரோடு, மூகாம்பிகை நகர் ஆகிய இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைப் பார்வையிட்டு பொது மக்களிடம் சிகிச்சைப் பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து, பெரம்பூர் பல்லவன்சாலை, கே.கே.நகர் அவென்யூ சாலை அருகே மழையால் ஏற்பட்டிருந்த பள்ளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக பள்ளத்தை சரி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று பாதிப்பின் விபரங்களை கேட்டறிந்தார். மேலும் ஜி.கே.எம் காலனியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் பார்வையிட்டார். சென்னை 70 அடி சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு, பெரவள்ளூர் ஆகிய பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, ஜம்புலிங்கம் மெயின் ரோடு, ஜே.ஆர். திருமண மண்டபத்தில் நபிகள் நாயகம் தெரு, வெற்றி செல்வி அன்பழகன் நகரில் அமைந்துள்ள எஸ்ஐபி மெமோரியல் டிரஸ்ட் காப்பகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, அம்மக்களுக்கு முதல்வர் ஆறதல் கூறினார். பின்னர், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாரதி நகர் கிழக்கு ஏரிக்கரை தெரு, சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை, மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். ராஜமங்களம் சிக்னல் அருகில் பொதுமக்களை சந்தித்து தேவைகளைக் கேட்டறிந்தார். எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டோபிகானா பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த இடங்களில் அரசின் சார்பிலும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் திமுக சார்பிலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. ஆய்வின் போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி அழகன், தாயகம் கவி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்