Monday, July 8, 2024
Home » தொகுப்பாளராக மாறிய போர்ன் ஸ்டார் !

தொகுப்பாளராக மாறிய போர்ன் ஸ்டார் !

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி“நான் இன்னும் என்னுடைய கடந்த காலங்களில் இருந்து மீளவில்லை”-மியா கலிஃபாஆபாசப் படங்களைப் பார்ப்பதினால் சொந்த உணர்ச்சிகளைச் சாகடித்து பாலியல் மீதான புரிதலை பெண்களுக்கெதிரான ஒரு வெறுப்புணர்வாகவும், வன்முறைக் குணமாகவும் மாற்றுகிறது. இதனோடு, அதற்கான சந்தைத் தேவையை அதிகரித்து விபச்சாரத்தைத் திரைப்படமாக்கிக் காசு பார்ப்பவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்துகிறது என்கிறது ஓர் ஆய்வு.காதல், திருமணம், உடலுறவு குறித்த சொந்த உணர்ச்சியில் பலருக்கு இது போன்ற எண்ணங்கள் வந்ததில்லை. ஆனால் “போர்னோ”-வைப் பார்த்த பிறகு அவர்களின் கண்ணோட்டத்தையே அது மாற்றிவிடுகிறது. விபச்சாரத்தைப் பொறுத்தவரை அது யாருடைய கனவுலக வாழ்க்கையும் கிடையாது. துன்ப துயரங்களினாலோ, வறுமையினாலோ, பெற்றோரிடமிருந்து கடத்தப்படுவதாலோ விபச்சாரம் ஒரு பெண்ணின் மேல் திணிக்கப்படுகிறது. ‘‘இப்படித்தான் என் வாழ்க்கையிலும் சூழ்நிலைக் காரணமாக திணிக்கப்பட்ட சம்பவமாக அரங்கேறியது’’ என்கிறார் மியா கலிஃபா. இந்த பெயரை கேள்விப்படாத இளைஞர்கள் இருந்தால் ஆச்சர்யம் தான். அந்த அளவிற்கு ஆபாச பட உலகில் கொடிகட்டி பறப்பவர் மியா. அவர் நடித்த படங்களை வைத்து இன்றளவும் பல்வேறு ஆபாச வலைத்தளங்கள் கோடிகளை குவித்து வருகின்றன. ஆபாசப் படங்கள் தயாரிப்பதன் மூலம் வருடத்திற்கு ஏறக்குறைய 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குப் பணம் கொழிக்கிறது. ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்சம் 13,000 படங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 3 கோடி புதிய பார்வையாளர்கள் இத்தளங்களுக்குச் செல்கின்றனர். ஒவ்வொரு 39 நிமிடத்திற்கும் ஒரு ஆபாசப் படம் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது. இணையதளம் வாயிலாக ஒவ்வொரு விநாடிக்கும் ஏறக்குறைய 53,000 பேர் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர். இதில் நடிப்பவர்களும் நடிகர்கள்தான். அதைத் தாண்டினால் அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் மட்டுமே என்ற உண்மையை வலிமையாக நிறுவியிருக்கிறார், நடிகை மியா கலிஃபா. “நான் ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்தி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை ரேங்கிங்கில் இருக்கிறேன்” என்கிறார். ஆபாசப் பட உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தும் இதுவரை மொத்தம் 12,000 டாலர்கள் மட்டுமே வருவாய் ஈட்டியிருக்கிறார் மியா. காலத்தின் கட்டாயம் அல்லது சூழ்நிலைக் காரணமாக மனிதர்களின் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதற்கு மியா கலிஃபாவும் விதிவிலக்கல்ல. ஒரு விபத்தை போன்று ஆபாச பட உலகில் அவர் நுழைந்த போது வயது 21. முதன்முதலாக ஆபாசப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானபோது தன் நண்பர்கள் யாருக்கும் அது தெரிந்துவிடக் கூடாது என்ற பதற்றத்திலேயே நடித்துள்ளார். “ஆனால், என் நண்பர்கள் என்னுடைய வீடியோவைப் பார்த்துவிட்டனர். தங்களுக்குள் அதை பகிரவும் செய்தனர். முதல் வீடியோவைத் தொடர்ந்து இரண்டாவதும் வெளியானது. இதுவரை வெளியான என் வீடியோக்களிலேயே மிகவும் வைரலானது, நான் புர்க்காவில் தோன்றிய வீடியோ, ஒப்பந்தமாகிவிட்டேன், பின்வாங்க முடியாது என்பதால் நடித்தேன்” என்கிறார் மியா. அந்த வீடியோ பார்த்து கொதித்தெழுந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், 2014ஆம் ஆண்டு மியாவின் தலையை துண்டிப்போம் என கொலை மிரட்டல் விடுத்தனர். முழு உடலை மறைத்து நடிக்கும் நடிகைகளையே எல்லோரும் சமூக வலைத்தளங்களில் சாடும் யுகத்தில், மியா கலிஃபா எதிர்கொண்ட விமர்சனங்கள், மிரட்டல்கள், அவமானங்களை யோசித்துக்கூட பார்க்க முடியாது. “என் தலையை தனியாக வெட்டியதுபோல் போட்டோஷாப் செய்யப்பட்ட ஒரு படத்தை எனக்கு அனுப்பி, ‘அடுத்து நீதான்’ என கொலை மிரட்டல் விடுத்தனர். சின்னச் சின்ன விஷயங்களை நான் கண்டு கொண்டது கிடையாது. அது என்னை காயப்படுத்தவும் செய்யாது. ஆனால், இந்த கொலை மிரட்டலுக்கு பிறகு துணிவான மனநிலைக்கு என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன். என் வீடியோக்களை பார்த்து ரசிப்பது எனக்கு பெருமை கிடையாது. அதைத் தாண்டி என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தற்போது என் நோக்கமாக இருக்கிறது. அதற்காகவே நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்” என ஒருவித நம்பிக்கையின்மையோடு பேசுகிறார்.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மிரட்டலுக்குப் பின் ஆப்கானிஸ்தான், எகிப்த், சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் அவருக்கு தடை விதித்தது. அது வரை சில நூறு பேர் மட்டுமே பின் தொடர்ந்த மியா கலிஃபாவின் சமூக வலைத்தளங்களை லட்சக் கணக்கானோர் பின் தொடர ஆரம்பித்தனர். அதே நேரம் அவர் பிறந்த தேசமான லெபனானில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக அவர் தெரிவித்த கருத்தால் அந்நாட்டு அரசின் தீராத வன்மத்திற்கும் ஆளானார். இப்படி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கினாலும், அவரை வைத்து ஆபாச படம் எடுத்த இணையதள நிறுவனங்கள் கோடிகளில் வருவாய் ஈட்டினர். இது குறித்து கூறும் மியா, “பெண்களைச் சட்டபூர்வமாக அவர்களின் பொருளாதாரத் தேவையை அறிந்து குறைவான சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்வார்கள். என்னுடைய பொருளாதார நிலை அதில் தள்ளிவிட்டது” என்கிறார். வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே இப்படங்களில் நடித்ததன் மூலம் உலக புகழ் பெற்ற மியா, தற்போது கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளின் தொகுப்பாளராக உள்ளார். அதன் மூலம் வரும் வருவாயின் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் கல்விக் கடனுக்கு வழங்கி வருகிறார். தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படுபவர்கள், மீண்டு வருவதற்கான உதவிகளையும் செய்து வருகிறார். ஆபாசப் படத்தில் பெண்ணுக்கெதிரான உச்சகட்ட ஆணாதிக்கம் வெளிப்படுவதைக் காணலாம். அதில் நீங்கள் பார்ப்பது பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறையே. இப்படங்கள் எடுக்கப்படுவதைக் கவனித்தால் பெண் எப்படி ஒரு அருவறுக்கத்தக்க அடிமையாக பயன்படுத்தப்படுகிறாள் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். இன்று சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. காமம் என்பது பேசு பொருள் என்ற நிலையிலிருந்து மாறி காட்சிப் பொருளாகி விட்டது. இணையம், அலைபேசி, லேப்டாப் இப்படி எதைத் தொட்டாலும் ஆபாசப்படங்கள் கிடைப்பது எளிதாகிவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ, விளம்பரங்களிலோ அல்லது திரைப்படங்களிலோ கதாநாயகிக்குத் தரப்படும் சிகையலங்காரம், காதலனிடம் காதல் வயப்படும் தருணங்கள், உடை, நடை இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு இளம் பெண் தான் ஒரு ஆணால் காதலிக்கப்பட வேண்டுமென்றால், முதலில் அவனுடைய காம இச்சைகளை நிறைவேற்றத் தகுதியாக இருக்க வேண்டும் என்று நினைக்க தூண்டப்படுகிறாள். அன்பு, பாசம், நேசம், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகத் தான் தெரிவிக்கப்படுகிறது. இது பெண் சமூகத்திற்கு இழைக்கப்படும் ஒரு அநீதி. ஒவ்வொரு ஆணும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதன் மூலம் ஒரு பெண் துன்பப்படுத்தப்படுவதற்குக் காரணமாக  அமைகிறான் என்பதை புரிந்துகொள்வது அவசியம்.தொகுப்பு: அன்னம் அரசு

You may also like

Leave a Comment

13 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi