தைப்பூச விழாவை முன்னிட்டு திருவாரூரில் கூட்ட நெரிசல்

 

திருவாரூர், ஜன. 26: தைப்பூச விழாவை முன்னிட்டு திருவாரூர் முருகன் கோயில் மற்றும் தியாகராஜர் சுவாமி பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி காரணமாக ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது. தமிழகத்தில் தைப்பூச நாளில் வடலூர் ராமலிங்கம் சுவாமி அருட்பெருஞ்ஜோதி தரிசனம் மட்டுமின்றி திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து வரும் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த பூஜைகளில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த தைப்பூச திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் திருஞானசம்பந்தர் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி மற்றும் கமலாலய தெப்ப குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் கீழ வீதியில் இருந்து வரும் பழனி ஆண்டவர் கோயில், வடக்கு வீதியில் இருந்து வரும் பழனி ஆண்டவர் கோயில், கோயில்கந்தன்குடி சுப்பிரமணியசுவாமி கோயில், எண்கண் சுப்ரமணியசுவாமி கோயில் உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருக பெருமானை வழிப்பட்டனர். மேலும் ஆழித்தேர் முன்பாக இந்த பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதன் அருகிலேயே பழனிஆண்டவர் கோயில் இருந்து வருவதால் நேற்று ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்