Wednesday, July 3, 2024
Home » தேவர்களின் ஐயம் தீர்த்த திருவள்ளுவர்!

தேவர்களின் ஐயம் தீர்த்த திருவள்ளுவர்!

by kannappan

திருஆலங்காடு. அற்புதமான நற்பதி. வேதம் என்னும் காட்டில் மறைந்து உறையும் மறைபொருள், புறக்கண்களுக்கு புலனாகும் விதமாக வடாரண்யேஷ்வரனாக அமர்ந்து விட்ட புனிதத் நற்பதி. மகான்களும் முனிகளும் பாடிப் பரவும் பெரும் பதி. காளியின் கர்வம் அடங்கிய நற்பதி. தலையால் நடந்து உலகத் தலைவனை காரைக்கால் அம்மையார் தரிசித்தப் பெரும்பதி. தில்லை சிற்றம்பலத்துக்கும் முந்திய, முன்பதி என்று பெருமைகள் பலப்பலவுடையது திருவாலங்காடு. அங்கே உலகாளும் பரமன் உமையாள் மகிழும் வண்ணம் காளியின் கர்வம் அடக்கிய திருவிளையாடலை செய்தான். அதை, போட்டிப் போட்டுக் கொண்டு அனைத்து ஞானியர்களும் புகழ்கிறார்கள். ‘‘பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே” என்று அப்பரும்…  ‘‘திகழ்வேடங் காளியொ டாடியஜெகதீசங் கேசந டேசுரர்திருவாலங் காடினில் வீறிய ……பெருமாளே என்று அருணகிரிநாதரும் பாடிப் பரவிய பரம்பொருள் அல்லவா அந்த ஈசன்? போதாத குறைக்கு ஆலங்காடு என்றாலே, ‘‘ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே,நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனேதாள வகைகளோடு மேள துந்துபிகள்முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியேஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே” என்ற கவியரசர் கண்ணதாசன் (காரைக்கால் அம்மையார் பாடுவதாக) எழுதிய பாடலை அல்லவா தமிழை நேசிக்கும் நல்லுள்ளங்கள் அசைபோடும்?மொத்தத்தில் அந்தக் காலத்து நாயன்மார்கள் முதல் இந்தக் காலத்து கண்ணதாசன் வரையில், வழிவழியாக மகான்கள் நேசித்து பூசிக்கும் இறைவன் அல்லவா அந்த ஆலங்காட்டு அண்ணல்? அந்த வகையில் ஆலமுண்ட ஆலங்காட்டு அண்ணலை திருவள்ளுவர் பாடிய வரலாறை இந்தக் கட்டுரையில் பார்ப்போமா? காளிதேவியின் கர்வத்தை அடக்க, காலை உச்சிக்கு மேல் தூக்கி ஆடினான் பரமன். பரதம் ஆடும் முறையை பரதமுனிக்கு உபதேசித்ததே ஈசன்தான். பரத முனி மூலமாக உலகிற்கு பரத சாஸ்திரம் தந்தவன் ஈசன். இப்படி, பரத சாஸ்திரத்தைப் படைத்த பரம்பொருளே அதை மீறலாமா? என்ற அய்யம் ஈசனின் ஆனந்தத் தாண்டவம் கண்ட அனைவரது உள்ளத்திலும் ஒரு ஓரமாக இருக்கத்தான் செய்தது. அந்த ஐயம், அப்பனின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்ட சந்தோஷத்தில், அனைவருக்கும் மறந்து விட்டது. ஏன்? ஈசனை எதிர்த்து போரிட்ட காளிதேவியே மறந்து தான் போய்விட்டாள். ஆனால், பிரம்மன் முதலிய தேவர்கள் மனதில் மட்டும் அந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அனைவரும் ஒரு வழியாக தைரியத்தை வரவைத்துக் கொண்டு ஈசனிடம் சென்று, உள்ளத்தின் ஐயப்பாட்டையும், அதனால் அவர்கள் படும் பாட்டையும் எடுத்துச் சொன்னார்கள். அதைக்கேட்ட இறைவன் புன்னகை பூத்தான். அப்பப்பா, அந்த சிரிப்பிற்குள்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்.  கலை என்பது முடிவில்லாத ஒரு சாகரம். மனிதனின் காலதேச வளர்ச்சிக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றத்தை கலை அன்னை மகிழ்வோடு ஏற்றால்தான் அந்தக்கலை நிலைத்து நிற்கும். உதாரணமாக தமிழ் கவிதை உலகை கண்ணதாசனின் எளிமையான, இனிமையான கவிதைகள் ஒரு புரட்டுப்புரட்டி, தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய இலக்கணம் படைத்தது இல்லையா? ஆங்கிலத்தில் இதையே ‘‘out of box thinking” என்று சொல்லுவார்கள். அதாவது வழக்கத்திற்கு மாறாக புதிதாக அதே சமயம் மிகவும் பொருத்தமான, தேர்ந்த செயல்களை செய்தல் என்று சொல்லலாம். அப்படி காலங்கள்தோறும் கலையில் புதுமையை புகட்டவேண்டும் என்று அந்த ஆடல்வல்லான் நினைத்தால் தவறென்ன இருக்கிறது.? இதைத்தான் மாணிக்கவாசகர் ‘‘முன்னை பழமைக்கும் முன்னை பரம்பொருளே! பின்னை புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” என்று பாடினார் போலும். அந்த ஆடல்வல்லானின் நோக்கம் நாம் அறிவதற்கில்லை என்பது போல அவனது மோகனப் புன்னகை அதை மறைத்தது. மெல்லத் தன் கொவ்வைச் செவ்வாயைத் திறந்து பேச ஆரம்பித்தான் எம்பெருமான்.  ‘‘நான்முகனே! தேவர்களே! உங்களது கேள்விக்கான பதில், கயிலையை நிகர்த்த மயிலையில், வள்ளுவன் என்ற முனிவன் உரைப்பான். அவனை நாடி நலம் பெறுக! ஆசிகள்!” என்று மலர் வாய் மலர்ந்தருளினான் இறைவன். இறைவன் பேச்சுக்கு மறு பேச்சு ஏது? அனைத்து தேவர்களும் உடன் ஆலங்காட்டில் இருந்து மயிலைக்கு விரைந்தார்கள்.  அங்கே திருவள்ளுவரின் இல்லத்தின் எதிரே ஒரு மறைவான இடத்தில் நின்று கொண்டு மாலும், பிரம்மனும், இந்திரனும் இன்னபிற தேவர்களும் வள்ளுவரை எவ்வாறு அனுகி சந்தேகத்தை கேட்பது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். அதை தனது இல்லத்து வாயிலின், திண்ணையில் அமர்ந்தபடி நெசவுத் தொழில் செய்து கொண்டிருந்த திருவள்ளுவர் கண்டு விட்டார். உடன் அவர் தனது யோக சக்தியால் தேவர்கள் வந்த காரணத்தை உணர்ந்து விட்டார். அவர்கள் தயங்கி நிற்கும் காரணமும் விளங்கியது. உடன் சற்றும் தாமதிக்காமல் கணீர் குரலில் ஒரு வெண்பா பாட ஆரம்பித்தார். ‘‘பூவிலயனும் புரந்தரனும் பூவுலகை தாவி அளந்தோனும் தாமிருக்க நாவில்இழை நக்கி நூல் நெருடும் ஏழை அறிவனோ குழை நக்கும் பிஞ்ஞகன் தன் கூத்து.”அந்த வெண்பாவின் ஆழ்ந்த பொருளும் சொற் சுவையும் பொருட் சுவையும் கண்டு தேவர்கள் மலைத்துப் போனார்கள். இது வள்ளுவரின் பெருமையை உலகறியச் செய்ய ஈசன் நடத்திய நாடகம் என்பதும் அவர்களுக்கு நொடியில் விளங்கியது. ஓடிவந்து அனைத்து தேவர்களும் அவரை வணங்கிச் சென்றார்களாம். இப்படி தேவர்களே மலைத்துப் போகும் அளவுக்கு வள்ளுவர் பாடிய பாடலின் பொருள்தான் என்ன? தாமரை மலரின் உறைந்திருக்கும் பிரம்மாவும், மூன்றடியால் உலகளந்த திருமாலும், தேவர்களின் தலைவனான தேவேந்திரனும், அறிய முடியாத ரகசியத்தை, ஒரு நெசவாளன் நான் அறிவது எங்கனம்? என்பது பாடலின் பொருள்! பொறுங்கள்! என்ன பெரிதாக பதில் சொல்லிவிட்டார் வள்ளுவர் என்று யோசிக்க வேண்டாம். உண்மையில் அவர் அற்புதமான பதிலைத் தந்திருக்கிறார்.  கண்ணன் பகவத் கீதையில் ‘‘அவஜானந்தி மாம் மூடா:” என்று சொல்கிறான். அதாவது பரம்பொருளான என்னை மூடர்களால் உள்ளபடி உணர முடியாது என்பது பொருள். அதாவது, இந்த உலக மாயையால் மூடியவர்களால் அதில் மூழ்கிப் போனவர்களால் இறைவனை அறிய முடியாது. நான், எனது என்ற அகம்பாவத்தோடு இறைவனை அணுகாமல், அவனுக்குத் தொண்டனாக மாறிவிட்டால், நம்மிடம் கல்லடியும், வில்லடியும், சொல்லடியும், பிரம்படியும் படும் எளியவனுக்கும் எளியவனாகி விடுவான். இதைத்தான் மாணிக்க வாசகர் ‘‘வானோர்க்கு அறிய மருந்தே போற்றிஏனோர்க்கு எளிய இறைவா போற்றி” என்றார். ஆகவே, நான் உலகை படைத்த பிரம்மன், நான் உலகை அளந்த திருமால், நான் தேவர்களின் அதிபதி இந்திரன் என்ற ஆணவத்தை விட்டு ஒழித்து, அவன் காலடியில் விழுந்து விட்டால் என்றும் அழியா முக்தி ஆனந்தம்தான் என்று சொல்லாமல் சொன்னார் திருவள்ளுவர். அது புரிந்து போனதால் தேவர்கள் பூரித்துப் போனார்கள்.  இரண்டடி திருக்குறளால் இவ்வுலகை புரட்டிப் போட்ட வள்ளுவர், அதே இரண்டடியால் வானாடு வாழ் வானவர்களையும் புரட்டிப் போட்டு விட்டார். அவரது தவ வலிமையையும் தமிழ் புலமையையும் புகழ்வதா? இல்லை, அவருக்காக வானோர்களையே அலைக்கழித்த ஆலங்காட்டு அண்ணலை புகழ்வதா? என்பது விளங்காத புதிர்தான்.ஜி.மகேஷ்…

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi