தேவரியம்பாக்கம் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்றி மண் கொட்டி சீரமைப்பு

 

வாலாஜாபாத், ஆக.12: தினகரன் செய்தி எதிரொலியால், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆரம்பப்பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்றி, மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையையொட்டி தேவரியம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த, ஊராட்சியில் சாலையையொட்டி அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் மற்றும் அங்கன்வாடியில் குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த வாலாஜாபாத் – ஒரகடம் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆறு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், சாலை மட்டத்திலிருந்து தற்போது பள்ளி வளாகம் 3 அடிக்கு தாழ்வான நிலையில் சென்றதால், சிறியளவு மழை பெய்தாலும், பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தோங்கி காணப்படுகின்றது.இதில் பள்ளி மாணவர்கள் விளையாடுவதும், வழுக்கி விழுந்து சேறும் சகதியமாக வீடு திரும்புவதும் தொடர் கதையாகி உள்ளன. இதனால், பள்ளி மாணவ – மாணவிகளுக்கு காய்ச்சல், சளி, இரும்பல் உள்ளிட்ட நோய் தொற்றுகளும் ஏற்படுவதாக இப்பகுதி மாணவ – மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, தினகரன் நாளிதழில் 8ம் தேதி படத்துடன் செய்தி வெளியாகின. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தின் உள்ளே இருந்த மழைநீரை மோட்டார் மூலம் அகற்றி, தாழ்வான பகுதிகளில் மண் கொட்டப்பட்டது. இந்த தீர்வு முழுமையான தீர்வு அல்ல, மழை காலம் என்பதால் இனி சிறிய அளவில் மழை பெய்தாலே இப்பகுதியில் மழைநீர் தேங்கும் நிலை நீடித்துதான் வருகின்றன. இதற்கு, முழு தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது