தேர்வு போட்டியில் 1,000 பேர் பங்கேற்பு

தர்மபுரி: சென்னையில் நடக்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான, மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் பங்கேற்க, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 1000 வீரர், வீராங்கனைகள் செல்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் சரக அளவிலும், மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். சமீபத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மொத்தம் 51 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 3 ஆயிரம் பேர் வெற்றி பெற்று பரிசு மற்றும் கோப்பைகள் பெற்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, இறகுப்பந்து, கபடி, கோகோ, தடகளம், நீச்சல், குத்துசண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். இந்நிலையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான, தமிழக அணியில் இடம் பெறுவதற்கான தேர்வு போட்டிகள், வரும் 30ம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி கூறியதாவது:
இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக, ஒன்றிய அரசின் சார்பில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டுக்கான போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கால்பந்து, கபடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்து, 600 முதல் 1000 வீர்கள் தேர்வு முகாமில் பங்கேற்க உள்ளனர். இதற்காக தயாராகி வருகின்றனர். வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 31ம்தேதி வரை, தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கோ-கோ, வாலிபால் மற்றும் ஹாக்கி ஆகிய போட்டிகள் நடக்கிறது.
தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள, மாநில அளவிலான தேர்வு போட்டிகள் சென்னையில் நடக்கிறது. கூடைப்பந்து போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் வரும் 1ம் தேதி அன்று பெண்களுக்கும், 2ம் தேதி ஆண்களுக்கும் நடக்கிறது.

கால்பந்து போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் வரும் 30ம்தேதி பெண்களுக்கும், 30 மற்றும் 1 ஆகிய தேதிகளில் ஆண்களுக்கும் நடக்கிறது. கபடி மற்றும் கோ-கோ போட்டிகள், வரும் 30ம்தேதி பெண்களுக்கும், 1ம் தேதி ஆண்களுக்கும், வாலிபால் மற்றும் ஹாக்கி போட்டிகள் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் வரும் 30ம்தேதி பெண்களுக்கும், 1ம் தேதி ஆண்களுக்கும் நடக்கிறது.

தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 1.1.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். காலை 7 மணிக்கு தேர்வு மையங்களில் அறிக்கை செய்ய வேண்டும். ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட், பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு, பயணப்படி மற்றும் தினப்படி ஏதும் வழங்கப்படாது. உரிய நேரத்தில் அறிக்கை செய்யாத, உரிய சான்றிதழ்கள் சமர்ப்பிக்காத வீரர், வீராங்கனைகள், தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு