தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம்

அரியலூர், ஜூன் 24: தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு :
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNUSRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ மற்றும் மாணவியர்கள் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 (TNPSC GROUP I) தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு மார்ச் 28 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி 1-ற்கான முதல்நிலைத் தேர்விற்கு (TNPSC GROUP I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் மே 29 முதல் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் TNPSC GROUP I முதனிலை போட்டித்தேர்விற்கு மாநில அளவில் இலவச மாதிரித்தேர்வுகள் ஜூன் 24, 27 மற்றும் ஜூலை 2 மற்றும் ஜூலை 5ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இம்மாதிரி தேர்வுகளில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற அரியலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் 9499055914, 04329 – 228641 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி