தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தமிழக அரசு பணிந்தது: பணி மாறுதல் செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்தது: 5 போலீஸ் அதிகாரிகளுக்கும் பணியாணை வழங்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: தினகரன் பத்திரிகையின் செய்தி எதிரொலியாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தமிழக அரசு இன்று காலையில் பணிந்தது. மாறுதல் செய்யப்பட்ட 3 அதிகாரிகளையும் பணியில் இருந்து விடுவித்ததோடு, மொத்தம் 5 அதிகாரிகளையும் உடனடியாக பணியில் சேரும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தோல்வி பயத்தில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், வருமான வரித்துறையிலும் திமுக தொடர்ந்து புகார் செய்து வந்தது. இந்தப் புகார் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. அதில் அமைச்சர்கள் உத்தரவுக்கிணங்க மாநிலம் முழுவதும் பண விநியோகத்தில் ஈடுபட ஆளும் கட்சிக்கு உதவியாக இருந்ததாக மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.மேலும் மேற்கு மண்டல ஐஜியாக அமல்ராஜ், மத்திய மண்டல ஐஜியாக தீபக் தாமோர், கோவை மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதோடு, திருச்சி கமிஷனராக இருந்த லோகநாதன் சில நாட்களுக்கு முன்னர் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர். தற்போது அந்த இடத்தில் நிர்வாகப் பிரிவு ஐஜி அருண் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பிறப்பித்தது. அந்த உத்தரவில் பணி மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். புதிய அதிகாரிகள் நேற்று பகல் 1 மணிக்குள் புதிய பணியிடங்களில் சேர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அமல்ராஜ், தீபக் தாமோர், அருண், செல்வநாகரத்தினம் ஆகியோர் புதிய பணியிடங்களில் சேருவதற்காக தங்களது பணியிடங்களுக்கான ஊர்களுக்கு சென்றனர். அப்போது அவர்கள் 4 பேரையும், பணியில் சேர வேண்டாம் என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அமல்ராஜ் மட்டும் மேற்கு மண்டல ஐஜியின் அறையில் அமர்ந்திருந்தார். மற்ற அதிகாரிகள் அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். டிஜிபி அலுவலக உத்தரவு வந்ததும், அவர்கள் தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே தங்கிவிட்டனர். அமல்ராஜூம் உடனடியாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். மேலும், பணி மாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் தினகரன், ஜெயராம், அருள் அரசு ஆகியோர் தாங்கள் வகித்த பதவிகளில் தொடர்ந்து பணியாற்றவும் வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர்கள் நேற்று தொடர்ந்து பணியாற்றி வந்தனர். அதோடு, இந்த பணி மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. நேற்று இரவு தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த இரு அதிகாரிகளிடமும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், முன்னாள் ஓய்வு பெற்ற உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து பேசியபடியே இருந்தனர். தேர்தல் ஆணைய உத்தரவை அமல்படுத்தாமல் 2 நாள் வரை தள்ளிப்போட வேண்டும். அதற்குள் தமிழகம் முழுவதும் கோவையில் இருந்து பணத்தை கொண்டு சென்று மக்களுக்கு விநியோகம் செய்து விடலாம் என்று திட்டமிட்டனர். இதற்காக நேற்றும் மாநிலம் முழுவதும் பணம் கடத்தல் நடந்தது. வீடு வீடாக பணமும் விநியோகமும் செய்யப்பட்டது. கீழ் மட்ட அதிகாரிகளுக்கு, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் பணம் விநியோகம் நேற்று முழுவதும் நடந்தது.இந்தநிலையில், தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மதிக்கவில்லை. மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. நாட்டிலேயே முதல் முறையாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தமிழக அரசுதான் மதிக்கவில்லை என்றும் தினகரன் பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டது. இந்த செய்தி இன்று காலையில் வெளியானதும், தேர்தல் ஆணையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடும் கோபமடைந்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணைய உத்தரவை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அமல்படுத்தாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இன்று காலை 10.45 மணிக்கு தமிழக உள்துறைச் செயலாளர் இரு அரசாணைகளைப் பிறப்பித்தார்.அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஐஜி தீபக் எம். தாமோர், மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்படுகிறார். அந்தப் பணியில் இருந்த ஜெயராம் விடுவிக்கப்படுகிறார். சென்னை தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்படுகிறார். அங்கிருந்த தினகரன் விடுவிக்கப்படுகிறார். மதுரை மதுவிலக்கு எஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன், கோவை தலைமையிட துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார். சென்னை டிஜிபி அலுவலக உதவி ஐஜியாக இருந்த செல்வநாகரத்தினம், கோவை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்படுகிறார் என்று ஒரு உத்தரவில் கூறியிருந்தனர். பின்னர் திருச்சி கமிஷனராக அருண் நியமனம் செய்யப்படுவதாக தனியாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததைத் தொடர்ந்து 5 போலீஸ் அதிகாரிகளும் இன்று காலையில் புதிய பணியிடங்களில் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக அரசு தேர்தல் ஆணைய உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதும், பின்னர் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று காலையில் தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை