தேன்கனிக்கோட்டையில் சாலையை கடந்து சென்ற 70 யானைகள்: போக்குவரத்து நிறுத்தம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை சானமாவு, ஊடேதுர்க்கம், நொகனூர் ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித் திரிந்த 70க்கும் மேற்பட்ட யானைகளை, வனத்துறையினர் கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 200க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சானமாவு, ஊடேதுர்க்கம், நொகனூர், ஜவளகிரி, தளி ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால், கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன், ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 30க்கும் மேற்பட்ட குழுவினர், சானமாவு, ஊடேதுர்க்கம், நொகனூர், தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில், பல்வேறு குழுக்களாக சுற்றித்திரிந்த 70க்கும் மேற்பட்ட யானைகளை ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அனைத்து யானைகளையும் நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டிச் சென்ற வனத்துறையினர், அங்கிருந்து கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நொகனூர் வனப்பகுதியில் யானைகள் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி சாலையை கடந்து சென்றது. யானைகள் பாதுகாப்பாக செல்லும் வகையில், அப்பகுதியில் வனத்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர். யானைகள் அனைத்தும் சாலையை கடந்த பின்னர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். நொகனூர் வனப்பகுதியிலிருந்து கஸ்பா, தாவரக்கரை, தின்னூர், அகலக்கோட்டை, ஜவளகிரி வழியாக 70க்கும் மேற்பட்ட யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி