தேனி விஐபியின் எல்லையில் முக்கிய பொறுப்புக்கு போட்டி போடும் நபர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஒற்றை தலைமை பிரச்னை தற்காலிகமாக கோர்ட், நீதிமன்றம்னு போய் இருக்கு… அதற்குள் கீழ்மட்டத்தில் தேனிக்காரரின் ஆட்களை நீக்கிய இடங்களில் பிரச்னை தலை எடுத்து இருக்காமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஒற்றைத் தலைமை சர்ச்சையில் சிக்கி தேனி விவிஐபி ஆதரவாளர்களான தேனி, கன்னியாகுமரி கிழக்கு, பெரம்பலூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, திருச்சி மாநகர் என ஆறு மாவட்ட செயலாளர்களை சேலம்காரர் நீக்கிட்டாரு… அதனால அந்த ஆறு மாவட்டங்கள்லயும் மாவட்ட செயலாளர் ெபாறுப்பு வாங்க பலரும் தலைமைய முட்டுறாங்களாம். தேனி மாவட்டத்தில் கட்சிப் பொறுப்பை யாருக்கு வழங்குவது என இலை தலைமை யோசித்து வருகிறது. தேனி அந்த விவிஐபியின் கோட்டையாக இருந்த காலத்திலேயே, சேலம்காரரின் தீவிர விசுவாசியாக இருந்து சேலம்காரரை ஆதரித்தவர் முன்னாள் எம்எல்ஏ ஜக்கு. அன்றைய காலக்கட்டத்தில் தேனி மாவட்டச்செயலாளர் பதவிக்கு எடப்பாடியே ஜக்குக்கு பரிந்துரை செய்தபோது, தேனி மாவட்டத்தில் தன் ஆதரவானவரே இருக்கவேண்டும் என்று மல்லுக்கட்டி வேறு ஒருவரை மாவட்ட செயலாளராக கொண்டு வந்தார் தேனிகாரர். தற்போது ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து சேலம் விவிஐபியை ஆதரித்த முன்னாள் எம்எல்ஏ ஜக்கு, முன்னாள் எம்பி பார், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் முருக்கு உள்ளிட்ட பலரும் மாவட்டச் செயலாளர் பதவியை பெறுவதற்காக பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் ஜக்குக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக இலை வட்டாரத்தில் பேசிக்கிறாங்க. இதே நிலைமைதான் தமிழகம் முழுவதும் வார்டில் இருந்து மாவட்ட செயலாளர் வரை நீடிக்கிறதாம். இதனால சேலம் விவிஐபிக்கு கட்சியை மீட்பதா.. கட்சியில் ஆட்களுக்கு பொறுப்பு கொடுப்பதா என்பது தெரியாமல் விழிப்பதாக அவரின் அடிபொடிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மனுக்களோட பொதுமக்களை அலையவிட்டு, அந்த அலைச்சலை பயன்படுத்தி கரன்சிகளை அள்ள நினைக்கும் காக்கிகளை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல மல்லூர்னு முடியுற பெயர் கொண்ட காவல்நிலையம் இயங்கி வருது. இந்த காவல்நிலையத்துல குடும்பத்தகராறு, நிலப்பிரச்னை, அடிதடினு பல்வேறு பிரச்னைகளோட, மனுக்களை கையில எடுத்துகிட்டு பப்ளிக் வர்றாங்களாம். ஆனா வர்ற பப்ளிக்கோட மனுக்களை அங்க பணியில இருக்குற 3 ஸ்டார், 2 ஸ்டார் காக்கிகள் வாங்குறதும் இல்லையாம். கண்டுக்குறதும் இல்லையாம்.சம்திங் கொடுக்குறவங்களோட மனுக்களை மட்டும் வாங்கி உடனே நடவடிக்கை எடுக்குறாங்களாம். அதோடு, மணலு, சரக்குன்னு மாபியாக்கள் கிட்ட சம்திங் வாங்குறதுலத்தான் குறியாக இருக்காங்களாம். சமீபத்துல அந்த லிமிட்ல இருக்குற பப்ளிக் ஒருத்தரு, ஒரு பிரச்னை காரணமாக, 3 மாதமாக புகார் மனுவோட வந்து, வந்து போய்கிட்டிருக்காராம். ஆனா அவருக்கு எந்த தீர்வும் கிடைக்கலையாம். இப்படி மல்லூர் காவல்நிலையத்துக்கு வர்ற பப்ளிக், தங்களோட பிரச்னகளுக்கு தீர்வு கிடைக்காம அவதிப்படுறாங்களாம். இதனால மாவட்ட உயர் காக்கி தலையிட்டு பப்ளிக் கொண்டுவரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது. இல்லையன்றால் சென்னைக்கே சென்று புகார் கொடுக்கிறோம்னு முடிவு எடுத்து இருக்காங்க.. இதனால மல்லூர்னு முடியிற ஸ்டேஷன்ல உள்ளவங்க கொஞ்சம் அசைந்து கொடுக்கிறாங்க…’’ என்றார் விக்கியனந்தா.‘‘பனியன் சிட்டியில பனியனை கூட காக்கிகள் உருவிடுறாங்க போலிருக்கே…’’ என்று வேதனையோடு கேட்டார் பீட்டர் மாமா.‘‘திருப்பூரில் உயிர் எழுத்துகளின்  முதல் வார்த்தையில் தொடங்கும் ஊரின் காவல் நிலையத்துக்கு யாரேனும் புகார்  மனு கொடுக்க சென்றால், கையில் கரன்சி நோட்டுகளுடன்தான் செல்லவேண்டும். இங்கு புகார் மனுவின் தன்மைக்கு ஏற்ப வழக்குப்பதிவு  செய்வதில்லை. எப்ஐஆர் தகவல் அடிப்படையில் கைது நடவடிக்கையும் கிடையாது.  இந்த வேலைகளை இங்குள்ள போலீசார் செய்வதில்லை. மாறாக, இருதரப்பையும்  வரவழைத்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்களாம். பெரும்பாலான  புகார்தாரர்களை, ஸ்ரீநகர் புறக்காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அங்கு  கட்டப்பஞ்சாயத்து ஜரூராக நடக்கிறது. ‘நீ பாதி கொடு… நீ மீதி கொடு…  என இரண்டு தரப்பிலும் கரன்சி வாங்கிக்கொண்டு, இருதரப்பையும் சமாதானம்  செய்துவைத்து, அனுப்பி விடுகிறார்களாம். குறிப்பாக, திருமண மோசடி தொடர்பான  புகார் மனுக்களில் கட்டப்பஞ்சாயத்து அளவுக்கு அதிகமாக நடக்கிறது. இந்த  விவகாரத்தில் நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஏழு  எழுத்து பெயர் கொண்ட ஒரு ஏட்டு ஆகியோர் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள்  பக்காவாக டீல் முடித்து, மேலதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய  பங்குத்தொகையையும் முறையாக கொடுத்து விடுகிறார்களாம். அதனால், எந்த  சிக்கலும் இல்லாமல், இவர்களது கட்டப்பஞ்சாயத்து ஸ்மூத்தாக ஓடிக்கொண்டு  இருக்கிறது. சீருடை பணியாக இருந்தாலும், பெரும்பாலான நேரத்தில் சீருடை  அணியாமல், காசு குவித்து விடுகிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா