தேனிக்காரர் மாஸ் காட்டக்கூடாது என்பதற்காக சேலம்காரர் இறக்கி உள்ள ரகசிய டீமை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தமிழ்நாட்டில் தேனிக்காரர் எங்கும் கூட்டம் நடத்தினாலும், சேர்கள் காலியாக இருக்க வேண்டும் என்று யார் காய் நகர்த்துகிறார்கள்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தில் சேலத்துக்காரர் அணியில் உள்ள இலை கட்சியின் மாவட்ட  செயலாளரான மாஜி அமைச்சருமானவர், மாவட்டத்தில் கிளை செயலாளர்கள் முதல் நிர்வாகிகளின் வீடுகளுக்கு நேரிலே செல்கிறாராம். அவர் தன் வீட்டு விசேஷத்துக்கு இன்விடேஷன் வைக்க செல்வதாக நினைத்தால் அது நினைப்பவர்களின் தவறு. அவர்கள் செல்வது, தேனிக்காரர் அணிக்கு நீங்கள் செல்லக்கூடாது என கேட்டு வருகிறாராம். மாஜி அமைச்சர் நேரில் வருவதால் சில நிர்வாகிகள் அவர் மனம் நோகக்கூடாது என்பதற்கு தலையாட்டி வருகிறார்களாம். தேனிக்காரர், பெரிய அளவில் கூட்டத்தை காட்டி சேலம்காரரை அசர வைக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக டெல்டாவில் இருந்து இலை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கும் தகவல் வெளியில் கசிந்ததால் இதை தடுப்பதற்கான முயற்சியில் மாவட்டத்தில் உள்ள இலை கட்சியினரின் வீடுகளுக்கு மாஜி அமைச்சர்  தினமும் நேரில் சென்று வருவதை… வாக்கிங் செல்வதாக நினைத்து சென்று வருகிறாராம். ஆக மொத்தம் தேனிக்காரருக்கு லாபமோ இல்லையோ, மாஜி அமைச்சரின் உடல் பிட்டானது தான் மிச்சமாம்…’’ என்று தொண்டர்கள் பேசிக் கொள்வதாக கூறினார்…’’ விக்கியானந்தா.‘‘ருசி கண்ட பூனை என்று யாரை சொல்றாங்க, விளக்கமாக சொல்லுங்க கேட்போம்…’’ என்று கேள்வியை வீசினார் பீட்டர் மாமா.‘‘கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ரேஷன் பிரிவு ரொம்பவே சுறு சுறுப்பாக இயங்குதாம். இங்குள்ள உதவியாளர் ஒருவர், மாவட்டம் முழுவதும் பயணித்து, ஒவ்வொரு ரேஷன் கடையாக ஏறி, இறங்கி வசூல் குவிக்கிறாராம். வசூல் பணத்தை, மேலிடம் வரை தட்டி விடுவதால், இவரை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லையாம். ஆனாலும், புகார் அதிகம் வந்த காரணத்தால், இவரை வேறு இடத்துக்கு டிரான்ஸ்பர் செய்து மாவட்ட உயரதிகாரி உத்தரவிட்டார். ஆனால், இந்த நபரோ, ருசி கண்ட பூனையாக ரேஷன் பிரிவு அலுவலகத்தையே சுற்றி சுற்றி வருகிறாராம். இவரது பணியிடத்துக்கு வேறு ஒரு பெண் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரையும் பதவி ஏற்க விடாமல் தடுத்து நிறுத்துகிறாராம். இவரது ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போவதால் ரேஷன் பிரிவு ஊழியர்கள் மட்டுமின்றி, கலெக்டர் ஆபீசில் பணிபுரியும் இதர பிரிவு ஊழியர்களும் முகம் சுளிக்கிறார்களாம். இதில், ஹைலைட் என்னவென்றால், இவர், கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது இப்பணியிடத்தில் நியமிக்கப்பட்டாராம். ஆட்சி மாறி ஒன்றேகால் வருடம் ஆகிவிட்டாலும், இவரது மிரட்டல், உருட்டல், வசூல் என எல்லாமே தொடர்கிறதாம்… செயல்பட வேண்டிய பெண் ஊழியரும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘திருட்டு மணலில் மினுமினுக்கும் மாளிகை கட்டிய இலை கட்சி ஆசாமியை பற்றி ெசால்லேன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடற்கரையோர மாவட்டத்தில் இலைக்கட்சியின் இளைஞரணி நிர்வாகியான மதுரையை ஆண்ட மன்னர் பெயர் கொண்ட ஒருவர், கடந்த ஆட்சியில் ஆற்று மணல் கொள்ளையில் சம்பாதித்து, அண்டை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான செலவில் வீடும் கட்டி வருகிறார். இவருக்கு முருகன் சுவாமி பெயர் கொண்ட உயர்மட்ட அதிகாரியானவர், ரூ.30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு முழு விசுவாசத்துடன் சவடு மண் அள்ள தற்போது வாய்மொழி உத்தரவில் அனுமதி தந்துள்ளார். இப்போது இவரே சவடுமண் அள்ளிக் கொண்டு இருக்கிறாராம். இலைக்கட்சி மீதான பழைய விசுவாசத்தில் தகுதியானவர்களை புறக்கணித்து விட்டு, இளைஞரணி நிர்வாகிக்கு மீண்டும் அனுமதி தந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அனுமதி கேட்டு வருபவர்களிடம் பல ஆயிரங்கள் கமிஷனாக கேட்பதாவும் புகார் எழுந்துள்ளது. பணம் தந்தால் மட்டுமே சவடு மண்ணுக்கு அனுமதி தரும் பிடிவாதத்தில் இருக்கிற இந்த அதிகாரி மீது, மாவட்ட தலைமைக்கு புகார் போய், இப்போது விசாரணை வேகமடைந்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இசட் பிரிவுக்கு மாங்கனியார் போட்ட திட்டத்திற்கு காரணம்’’ என்ன என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கண்ணகி எரிச்ச ஊருல, தேனிக்காரருக்கு ஆதரவு ரொம்பவுமே முதல்ல குறைஞ்சி இருந்துச்சாம்.. ரெண்டாம்கட்டமா ஆதரவு திடீர்னு அதிகரிச்சு போச்சாம்.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மாங்கனியார் ரொம்பவே ஷாக்காயிட்டாராம். ஆட்சியில இருந்தாலும், இல்லாம போனாலும் மக்கள மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் அந்த தெர்மாகோல் மாஜி மந்திரியும், ஸ்டெடி இல்லாம இருக்காராம். இதனால சவுத்சைடு சின்னதாவும் இல்லாம, பெரிதாவும் இல்லாம ஒரு ரவுண்டு போயிட்டு வரலாமுன்னு ஒரு திட்டம் போட்டிருக்காராம். எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாம திரும்பி வந்துட்டா, எல்லோரும் என்னோட இருக்காங்கன்னு சொல்லிடலாமுன்னு நினைச்சிக்கிட்டிருக்காராம். அதே நேரத்துல, தன்னோட பாதுகாப்புக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் மட்டும் வர்றாங்க. இதனை அதிகரிக்க ஒன்றிய அரசு வழங்கும் இசட் பிரிவை வாங்கிட்டு, ஜம்முன்னு உலா வரலாம் என்பது மாங்கனியாரின் திட்டமாம். இதனால உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குன்னு ஒரு குண்டை போட்டிருப்பதாக அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க.. என்றார் விக்கியானந்தா….

Related posts

தெற்கே இருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டம் போட்டிருக்கும் சின்ன மம்மி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

பிரசாரத்தில் வலிய வந்து வம்பில் சிக்கிய பெண் வேட்பாளர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

இதுதானா உங்க டக்கு என சேலம்காரரின் முடிவை கிண்டல் செய்யும் தேனிக்காரரின் அணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா