தேனிக்காரருக்கு செக் வைக்க மாஜி பெல் அமைச்சர் தரப்பு களம் இறங்கி இருப்பது குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி அமைச்சர் ஒருத்தர் ரொம்பவே டென்ஷனில் இருக்கிறாராமே ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் ‘பெல்’லானவர் சேலத்துக்காரர் அணியில் கோலோச்சி வருகிறார். இவருக்கு செக்வைக்க தேனிக்காரர் முடிவு செய்து, டெல்டா மாவட்டம் முழுவதும் சேலத்துக்காரர் அணிக்கு எதிராக செயல்பட்டு வரும் முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைத்தும், பதவி கொடுத்தும் ஏவி விட்டுள்ளாராம். கடலோர மாவட்டத்தில், ‘பெல்’லான மாஜி அமைச்சருக்கு எதிராக செயல்பட்டு வரும் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து தேனிக்காரர் நியமித்துள்ளார். அவர் ‘பெல்’லானவருக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறாராம். முக்கியமாக, மாஜி அமைச்சருக்கு செக் வைக்கும் விதமாகத்தான் அந்த நிர்வாகி கடலோர மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை பற்றிய ரகசிய தகவல்களை சேகரித்து தேனிக்காரருக்கு அனுப்பும் பணி ஒப்படைக்கப்பட்டிருக்காம். அந்த தகவல்களை டெல்லிக்கு பாஸ் செய்து, டெல்லி தலைகள் மூலம் ‘பெல்’லானவருக்கு செக் வைக்க முயற்சி செய்து வருகிறாராம். ஏற்கனவே, கோவையை சேர்ந்த மாஜி ‘பெல்’ அமைச்சருக்கு அப்படித்தான் சென்ட்ரல் ஏஜென்சி மூலம் செக் வைத்ததாக, தேனிக்காரரின் அடிபொடிகள் பேசிக்கிறாங்க. தற்போது இந்த தகவல் வெளியில் கசிந்துள்ளதாம். இந்த விவகாரம் தெரிய வந்த மாஜி அமைச்சர் ‘பெல்’லானவர் தேனிக்காரர் மீது உச்சக்கட்ட டென்ஷனில் உள்ளாராம். இந்த தகவல் தேனிக்காரர் கவனத்துக்கு உடனே சென்றதாம். கடலோர மாவட்டத்தில் மாஜி அமைச்சர் ‘பெல்’லானவருக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளை ஒன்றாக திரட்டி அவருக்கு செக் வைக்க உத்தரவிட்டுள்ளாராம். அவரின் அந்தரங்கங்களை சேகரிக்க சொல்லி இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பொறியாளர்களை பொறி வைத்து பிடிக்க காத்திருக்கும் அதிகாரிகளை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவையில், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் அரசையே அசைத்து பார்க்கும் தீர்மானமாம். அதாவது, ‘தமிழகத்தில் அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் 20 மாநகராட்சிகளில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும்’’ என்பதுதானாம். இந்த தீர்மானத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி உளவுப்பிரிவு போலீசார் மோப்பம் பிடிக்க துவங்கினர். அப்போது, இதில், இரு மாநகராட்சி பொறியாளர்கள் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது. அதில் ஒருவர், கோவையில் ஏற்கனவே பணிபுரிந்து, ஆட்சி மாற்றத்துக்கு பிறகு வேறு மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர். இன்னொருவர் தற்போது கோவை மாநகராட்சியில் உதவி நிர்வாக பொறியாளராக பணி புரிந்து வருபவராம். இவர்கள் இருவரும் ஏன் இந்த விவகாரத்தை முன்னெடுக்கிறார்கள் என தோண்ட ஆரம்பித்தபோது, இவர்களில் ஒருவர் கோவை மாநகராட்சியின் உயர் பதவியை பிடிக்க கடுமையாக போட்டியிடுகிறார் எனவும், இவரை ஆப் செய்தால் இந்த போராட்டத்தை தடுத்துவிடலாம் எனவும் தெரியவந்தது. இவர், தன்னை ஆப் செய்ய அரசு சார்பில் உயரதிகாரிகள் வருவார்கள், அப்போது தனது கோரிக்கையை முன்வைத்து மீண்டும் கோவை மாநகராட்சிக்குள் நுழைந்து விட வேண்டும் என தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறாராம். அரசுக்கு எதிராக காய் நகர்த்தும், இந்த இரு பொறியாளர்களை, பொறி வைத்து பிடிக்க அதிகாரிகள் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கிரிவலத்துக்கு மட்டும் பேமஸ் இல்லை… மணல் கடத்தலுக்கும் பேமசாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டத்துல, செய் ஆறு நகர்ல மணல் கொள்ளை 24 மணிநேரமும் ஜோராக நடக்குதாம். அதுவும் பைக்குலயே மணல் கடத்துறாங்களாம். மணல் கடத்துறதுக்கு, கொள்ளையர்கள் திருட்டு பைக்குகளைத்தான் பயன்படுத்துறாங்களாம். இதுல, சில நேர்மையான காக்கிகள், விரட்டிப் பிடிக்கிறப்போ, பைக்கை விட்டு, விட்டு தப்பிஒடிடுறாங்களாம். பெரும்பாலான மணல் கொள்ளையருங்க, நம்பர் பிளேட்டை கழட்டி வெச்சிட்டுத்தான் தொழிலுக்கே போறாங்களாம். அப்படி இருந்தும், சில சமூக ஆர்வலர்கள் மணல் கொள்ளையர்கள் விவரங்களை காக்கிகளுக்கு சொல்றாங்களாம். ஆனா, தகவல் கொடுக்கும் நபர்கள் குறித்த விவரங்கள், மணல் கொள்ளையர்களுக்கு எப்படியோ போய்டுதாம். இதனால, நமக்கு ஏன் வம்புன்னு பலர் கண்டும் காணாமல் இருந்துடுறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சிவகங்கை மாவட்டத்துல நடக்கும் ஒரு ஸ்பெஷல் விஷயத்தை சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சிவகங்கை மாவட்டத்தில் இலைக்கட்சியின் முன்னாள் மந்திரியான ஐந்தெழுத்துக்காரருக்கு, கடந்த சட்டசபை தேர்தலில் தொகுதியில் போட்டியிட இலைக்கட்சி மேலிடம் சீட் வழங்கவில்லை. தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்தார். இந்த பதவி மட்டுமல்ல… எந்த பதவியும் தராமல் இவரை மேலிடம் மொத்தமாக புறக்கணித்து வைத்தது. இதனால் கடுப்பாகி போயிருந்த அவர், அவ்வப்போது சம்பிரதாயத்திற்காக இலைக்கட்சி கூட்டங்களில் மட்டும் தலைகாட்டுவது வழக்கம். கடந்த வாரம் நகரில் நடந்த இலைக்கட்சியின் 51வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில், இல்லாத விஷயத்தையெல்லாம் சொல்லி சர்ச்சைக்குரிய வகையில் ஆளும் கட்சியை விமர்சித்திருக்கிறார். கட்சி மேலிடத்தின் கவனத்தை திருப்புகிறேன் என, கண்டபடி பேசி மக்கள் வெறுப்பை அள்ளிக் கொண்டு, கட்சிக்கு அவப்பெயரைத் தந்து வருகிறார் என இலைக்கட்சியினரே விமர்சிக்கின்றனர். அத்தோடு, இலைக்கட்சி மேலிடத்தின் மீது தனக்குள்ள வெறுப்பை காட்ட, வேண்டுமென்றே சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மொத்தத்தில் இந்த ஐந்தெழுத்துக்காரரின் செயல்பாடுகள், ஏற்கனவே உடைந்து கிடக்கும் இலைக்கட்சியை, மேலும் நொறுக்குவதற்கான வேலையாகவே இருக்கிறதென கட்சியினரின் விமர்சனங்கள் எழுந்துள்ளன…’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா