Thursday, June 27, 2024
Home » தேடிவந்து அருளுவாள் காசி அன்னபூரணி

தேடிவந்து அருளுவாள் காசி அன்னபூரணி

by kannappan

திரிவேனி சங்கமத்தில் சாந்தமே வடிவாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார் ராமப் பிரசாதர். இந்த புங்கவர் வங்க தேசத்தை சேர்ந்தவர் என்பதை அவரது முக ஜாடையை வைத்தே கணித்து விடலாம். காளியின் வழிபாட்டிற்கு பெயர் போன வங்க தேசத்தில் பிறந்த இவர், காளி தேவியின் மாபெரும் பக்தராவார். குலத்தொழிலான ஆயுர்வேத வைத்தியம் பார்ப்பதை வெறுத்து ஒதுக்கி பிறவிப் பிணிக்கு வைத்தியமாக காளி தேவியை தஞ்சம் புகுந்தார். எந்நேரமும் காளியின் மூல மந்திரத்தை ஜெபித்தபடியே ஆனந்தத்தில் லயித்து இருக்கும் உத்தமர் இவர். காளியின் அருள் இருந்தால் கவி பாடுதல் முதலிய பல கலைகள், ‘‘நான் முன்னே! நீ முன்னே!’’ என்று போட்டி போட்டுக் கொண்டு வசப்படும். அப்படியிருக்க காளி என்னும் அமுதை, அள்ளி அள்ளிப் பருகிய ராமப் பிரசாதரைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?  ராமப் பிரசாதர், காளியின் அருளால் சமஸ்கிருதத்தில்  மாபெரும் புலமை பெற்று விளங்கினார். அம்பிகையை தாயாகவும், பிறந்த வீட்டிற்கு வந்த பெண்ணாகவும் பாவித்து இவர் பாடிய பாடல்களை பாடாமல் வங்கத்தில் காளி பூஜை நிறைவு பெறாது. ஒவ்வொரு பாட்டும் சொல்லழகும், பொருள் சுவையும் நிறைந்தவை. இந்தப் பாடல்களை கேட்பவர் மனம் கல்லாக இருந்தாலும் உருகி விடும் என்றால் அது மிகையல்ல. அப்படியிருக்க கல்லாக சமைத்து விட்டாலும் இயற்கையாகவே அன்பான மனம் படைத்த காளி தேவி உருகாமல் இருப்பாளா?ஒருமுறை அம்பிகையை, பாடிய படியே வீட்டிற்கு வேலி கட்டிக் கொண்டிருந்தார் ராமப் பிரசாதர். அப்போது, அவரது மகளது உருவில் வந்து, அவருக்கு வேண்டிய உதவியெல்லாம் காளி தேவி செய்தாள். எல்லாம் அவரது இன்னிசையை காதார கேட்கத்தான். நான்கு வேதங்களும், ஆறு சமயங்களும், மந்திரங்களும், புராணங்களும், சாஸ்திரங்களும், இதிகாசங்களும் அம்பிகையை விடாமல் போற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவள் விரும்புவதோ, தூய்மையான மனதோடு, அன்பாகப் பாடும் பாமாலையை தான். அதனால் தான் அவள், ராமப் பிரசாதரிடம் ஓடோடி வந்துவிட்டாள். பாட்டு  கேட்க வந்த அம்பிகையை இனம் காணவில்லையே என்று ராமப்பிரசாதர்  பதறினார். அவளது காலை கெட்டியாக பிடிக்கவில்லையே என்று அழுதார். ‘‘இனி என் உடல் விட்டு உயிர் பிரிந்தாலும் என்னை விட்டு உன் நினைவு பிரியக் கூடாது தாயே!’’ என்று வரம் கேட்க முடியாத பாவி ஆகிவிட்டேனே என்று விழுந்தார், புரண்டார், கதறினார், உருகினார்.  இப்படி ராமனந்தர் வாழ்வில் காளி செய்த அற்புதங்கள் ஏராளம். ஒருமுறை இவர் சந்தியாவந்தனம் செய்வதற்காக நதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் இவரிடம் ஓடி வந்தாள். ‘‘ஐயா நீங்கள் பாடுவதை கேட்க நான் காசியில் இருந்து வந்திருக்கிறேன். என் செவி குளிர ஒரு கீர்த்தனை பாடுங்களேன்’’ என்று கை கூப்பி ராமப் பிரசாதரை அந்தப் பெண் வேண்டிக் கொண்டாள். ராமப் பிரசாதர் சந்தியாவந்தனம் செய்யும் அவசரத்தில் அந்தப் பெண்ணை காத்திருக்கும் படி செய்கை செய்து விட்டு, நதிக்கு விரைந்தார். மெல்ல தனது வழிபாட்டை முடித்து விட்டு வீடு திரும்பினார்.ஆனால், காலையில் அவர் கண்ட அந்தப் பெண்ணை காணவில்லை. காளியின் புகழ் கேட்க வந்தவளை ஏமாற்றத்தொடு திரும்பி அனுப்பிவிட்டேனே என்று ராமப் பிரசாதர் வருந்தினார். தனது தவறுக்கு காளியிடம் மன்னிப்பு கேட்க தியானத்தில் ஆழ்ந்தார். தியானத்தில், காளி, காசி அன்னபூரணியாக காட்சி தந்தாள். ‘‘அப்பனே உனது பாடலை கேட்க வந்தவள் நான்தான். உலகின் பசியை நீக்கும்  நான், என் இசைப் பசி தீராமல் காசிக்கு திரும்ப வேண்டியதாயிற்று.” என்று வருத்தத்தோடு அம்பிகை, அவரது தியானத்தில் மொழிந்தாள். அதைக்கேட்ட ராமப் பிரசாதர், திடுக்கிட்டு எழுந்தார். பல கோடி காலமாக பல முனிவர்கள் தவமியற்றியும் காணாத அம்பிகை, தேடி வந்த போது உதாசீனம் செய்துவிட்ட பாதகன், என்று தன்னைத் தானே நொந்து கொண்டார். உணர்ச்சி வசப்பட்டு, கண்களில் நீர்மல்க, கையும் மெய்யும் சோர பூமியில் சரிந்தார். ‘‘வேலி கட்ட வந்த போதும் விட்டுவிட்டேன். இசை வேண்டி வந்த போதும் விட்டுவிட்டேன். இனி இந்த உடலில் உயிர் இருந்து என்ன பயன். அதையும் விட்டுவிடுகிறேன். இப்போதே போகிறேன் காசிக்கு. அம்பிகையின் அழகு தரிசனம் வாய்க்க வில்லை என்றால், என்னை நானே மாய்த்துக் கொள்கிறேன்.’’ என்று உறுதி பூண்டு கொண்டே ராமப் பிரசாதர் எழுந்தார். பிறகு நொடி கூட தாமதிக்காமல் காசிக்கு விரைந்தார்.வழியில் திரிவேனி சங்கமத்தில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு பயணத்தை தொடர எண்ணினார். ஆகவே அங்கேயே ஒரு மரத்தின் அடியில் கங்கையின் கரையில் அமர்ந்தார். அந்த அமைதியான சூழலும், ரம்மியமான கங்கையின் சலசலப்பும் அவருக்கு காளியின் நினைப்பை ஏற்படுத்தியது. ஆகவே அங்கேயே அமர்ந்து காளியை தியானிப்பது என்று தீர்மானித்தார். அவர் தியானத்தில் ஆழ்ந்தது தான் தாமதம். அங்கே அனைவருக்கும் கேட்பது போல ஒரு அசரீரி (வானத்தில் இருந்து உருவத்தை காட்டாமல், தேவி தரும் குரல்) கேட்க ஆரம்பித்தது.‘‘அப்பனே கலக்கம் வேண்டாம்! பக்தர்கள் இருக்கும் இடமே காசி! அவர்கள் என்னை எண்ணி விடும் கண்ணீரே கங்கை. என் பாதத்தை பிடிப்பதே மோக்ஷம்! இதை உணர்த்தவே யாம் இப்படி ஒரு நாடகத்தை நடத்தினோம். எங்கெல்லாம் நீ என்னை நினைத்து உருகுகிறாயோ அந்த இடமெல்லாம் காசி தான் என்னும் போது, தனியாக எதற்கு காசி யாத்திரை. இல்லம் திரும்பு. உனது பிரிவால் வருந்தும் உனது குடும்பத்திற்கு துணையாக இரு. ஆசிகள் பலப்பல.’’ இரண்டொரு நொடியே பெய்த தேன் மழையைப் போல அம்பிகையின் இனிய குரல் ஒலித்து, அடங்கியது. அதை கேட்ட ராமப்ரசாதர் பரம சந்தோசமானார். கைகளை சிரத்தின் மேல் குவித்து வானத்தை நோக்கி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இடுகாடாக இருந்தாலும் பக்தன் இருக்கும் இடமே காசி என்று சொன்ன அம்பிகையின் அருளை என்னவென்று புகழ்வது என்று விளங்காமல் திண்டாடினார்.மேலே கண்ட சம்பவத்தை அழகாக பாடலாக பாடி, ராமப் பிரசாதர் நமக்கு தந்திருக்கிறார். அந்தப் பாடலின் கருத்து பின்வருமாறு.‘‘காசி யாத்திரையால் என்ன பயன்? அம்பிகையின் பாதமே காசி, கங்கை கயை எல்லாம்.  அம்பிகையை த்யானிப்பதால் வரும் ஆனந்தம் கங்கையில் குளித்தாலும் வராது. காளிகா என்று அவள் நாமம் சொன்னால், பாவங்கள் போசுங்கிப் போகும். பஞ்சுப் பொதிகள் பல இருந்தாலும் ஒரே ஒரு தீச் சுடர் அதை பொசுக்கி விடும். அது போல பாவங்கள் பலவானாலும், காளி என்ற நாமம், அதைப் போக்கிவிடும்.பாவமே இல்லாதவனுக்கு எதற்கு கங்கா ஸ்நானம்? கடனே இல்லாதவன் எதற்கு கயையில் பித்ரு கடனை கழிக்க வேண்டும்? தலையே இல்லாதவனுக்கு தலைவலி ஏது? கடனே இல்லாதவனுக்கு அதை அடைக்கும் சுமை ஏது? காளியை சரணடைந்த பின்னும் காசிக்கு செல்லும் மூடனை கண்டால் சிரிப்பு தான் வருகிறது.”எவ்வளவு ஆழ்ந்த அர்த்தங்கள் பாருங்கள். அம்பிகை அசரீரியாக மொழிந்ததை இன்னிசையாக தந்து விட்ட ராமப் பிரசாதரின் திறமையே திறமை.ஒவ்வொரு ஆண்டும் காசியில் இருக்கும் தங்க அன்னபூரணி விக்ரகத்தை தீபாவளியை ஒட்டி வெளியில் எடுத்து விமரிசையாக பூஜை செய்வார்கள். (மற்ற நாளெல்லாம் தங்க அன்னபூரணியை தரிசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.)அப்போது காசி அன்னபூரணியின் கோயிலே அன்னத்தால் நிரம்பி இருக்கும். தின்பண்டங் களாலேயே கோவிலை முழுதும் அலங்கரிப்பார்கள்.  கோலாகலமாக நடக்கும் இந்த விழாவை காண ஜனங்கள் கோடி கோடியாக சேர்வார்கள். நம்மால் அதை கண்ணார கண்டு சேவிக்க முடியாவிட்டாலும், ராமப் பிரசாதரை போல இருந்த இடத்திலேயே அந்த காளியை அன்னபூரணியை வணங்குவோம். அவருக்கு தேடி வந்து அருளிய காசி அன்னபூரணி நமக்கும் அருளுவாள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.ஜி.மகேஷ்…

You may also like

Leave a Comment

four + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi