தேசிய நெடுஞ்சாலையில் இனிமேல் மேற்கொள்ளப்படும் சாலை, மேம்பால பணிகள் ஓராண்டிற்குள் முடிக்கா விட்டால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை அதிகாரிகள் தகவல்

வேலூர், டிச.27: தேசிய நெடுஞ்சாலையில் இனிமேல் மேற்கொள்ளப்படும் சாலை, மேம்பால பணிகளை ஓராண்டிற்குள் முடிக்கா விட்டால் ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களையும், முக்கிய நகரங்களையும் இணைக்கும் சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து உள்ளது. இதில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகளை அடையாளம் கண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை பெற்றது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விபத்து நடைபெறும் பகுதிகளில் மேம்பாலம், சிறுபாலம் அமைத்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நடைபெறும் மையமாக ஆற்காடு- ராணிப்பேட்டை- செய்யாறு சாலை சந்திப்பு அடையாளம் காணப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட மேம்பால பணிகள் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடை பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து படங்களுடன் விரிவான செய்தி தினகரனில் நேற்று வெளியானது.

இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் இனி வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள சாலை, மேம்பால பணிகளை ஓராண்டிற்குள் முடிக்கா விட்டால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை பணிகளை பிரபல தனியார் நிறுவனம் எடுத்து, அந்த பணிகளை மற்றொரு ஒப்பந்தாரரிடம் கைமாற்றி கொடுத்து விடுகின்றனர். இதனால் பணிகளை விரைவாக முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில், இனி மேல் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் டெண்டர் விடப்படும். இந்த டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் ஓராண்டிற்குள் அந்த பணிகளை முடிக்க வேண்டும். அப்படி முடிக்காவிட்டால், அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர் அடுத்து எந்த டெண்டரும் எடுக்க முடியாத நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை