தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவு தேர்வுகளில் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களுக்கு பணம் வழங்குவதில் இழுபறி: கல்வி நிறுவனங்கள் மீது புகார்

 

காஞ்சிபுரம்: தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட், கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களுக்கு சில கல்வி நிறுவனங்கள் முகமையிடமிருந்து முழுத்தொகையை பெற்றும், சரிவர வழங்குவதில்லை என்று தேர்வு பணிகளில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கடந்த மே மாதம் மாதம் 5ம்தேதி நீட்தேர்வும், மே 16, 17, 18, 19 தேதிகளில் கியூட் தேர்வும் நடைபெற்றது.

இங்கு, கியூட் தேர்வு என்பது மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு ஆகும். இந்த தேர்வுக்காக தேசிய தேர்வு முகமை மைய முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு ஒரு நாளைக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை வரையறுத்து தேர்வு நடைபெறும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு தேசிய தேர்வு முகமை வழங்குகிறது. அந்த, கல்வி நிறுவனங்கள் தேர்வு மையத்தில் பணியாற்றும் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஆனால், கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட குறைத்து வழங்குவதாகவும், சில மையங்களில் பல்வேறு காரணங்களை கூறி வழங்குவதே இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, தேசிய தேர்வு முகமை பொறுப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடும் அறை கண்காணிப்பாளர்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க தேர்வு பணியில் ஈடுபடும் ஊழியர்களின் நலன் கருதி தார்மீக ரீதியிலான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும், இல்லையேல் நேரடியாக தேர்வு பணியில் ஈடுபடுபவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து தேர்வு முகமைக்கு பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு