தேங்கிய மழைநீரை வெளியேற்ற குடியிருப்பின் மதில்சுவரை இடிக்க வந்த ராணுவத்தினர்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆலந்தூர்: தொடர்மழை காரணமாக, பரங்கிமலை ராணுவ பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட ராணுவ குடியிருப்புகள் மற்றும் அருகில் பிச்சன் தெருவில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இந்த நிலையில், ராணுவ குடியிருப்பில் தேங்கிய மழைநீரை பிச்சன் தெருவழியாக, எம்.கே.என். சாலையில் வெளியேற்ற அங்குள்ள மதில்சுவரை உடைக்க, ராணுவ அதிகாரிகள் முடிவு செய்து,  துப்பாக்கியுடன் நேற்று அங்கு வந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஏற்கனவே வீடுகளில் தண்ணீர் புகுந்து உடமைகளை இழந்துள்ளோம். மதில்சுவரை உடைத்து தண்ணீரை வெளியேற்றினால், நாங்கள் மிகவும் பாதிக்கப்படுவோம். ஆகவே மதில் சுவரை இடிக்க கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால், ராணுவ வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன், மண்டல கண்காணிப்பு அதிகாரி நிர்மல் ராஜ், மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேஷன் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர், ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிச்சன் தெரு மதில்சுவரை இடிக்காமலேயே ராணுவ குடியிருப்பில் தேங்கிய மழைநீரை கால்வாய் வழியாக வெளியேற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து, ராணுவ அதிகாரிகளும், பொதுமக்களும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்