தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நெட்டை, உயர் விளைச்சல், வீரிய ஒட்டு ரகத்திற்கு உரம் தவறாமல் இடவேண்டும்-தோட்டக்கலை பேராசிரியர் விளக்கம்

நீடாமங்கலம் : தென்னை உர மேலாண்மை பற்றி நீடாமங்கலம் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் (தோட்டக்கலை) ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பல்லாண்டுப் பயிராக சாகுபடி செய்யப்படும் தென்னையானது ஊட்டச்சத்து பற்றாக்குறையை வெளிக்காட்டுவதிலும் இடக்கூடிய சத்தினை எடுத்துக்கொண்டு நிவர்த்தி செய்துகொள்வதிலும் மெதுவான செயல்பாடுகொண்டது. ஒருங்கிணைந்த உரமேலாண்மை முறைகளான அங்கக, அனங்கக மற்றும் பசுந்தழை உர நிர்வாகம் ஆகியன பயிருக்கு தேவையான 9 வகையான பேரூட்ட மற்றும் 2ம் நிலை ஊட்டசத்துக்களையும் மற்றும் 7 வகையான நுண்ணூட்ட சத்துக்களையும் வழங்குவதோடு மண் வளத்தைப் பேணிக்காப்பதிலும் முக்கிய காரணியாக செயல்படுகிறது.நீண்ட காலப்பயிரான தென்னைக்கு நட்ட ஒரு வருடம் முதல் பரிந்துரைக்கப்பட்ட அளவில் அனங்கக செயற்கை உரங்களையும் இம்மாதங்களில் இடவேண்டும். நெட்டை மற்றும் உயர் விளைச்சல் ரகங்களுக்கும் வீரிய ஒட்டு ரகங்களுக்கும் வெவ்வேறு அளவில் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை தவறாமல் இம்மாதங்களில் இட்டு தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். நெட்டை மற்றும் உயர் விளைச்சல் ரகங்களுக்கு ஒரு வருட வயதுடைய மரம் ஒன்றிற்கு தழை சத்து வழங்கும் 325 கிராம் யூரியா, மணிச்சத்து வழங்கும் 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் சாம்பல் சத்து வழங்கும் 500 கிராம் பொட்டாஷ் உரத்தையும், வேப்பம்புண்ணாக்கு 1.5 கி.கி ஆகிய உரங்களை நன்கு மட்கிய 10 கி.கி தொழு உரத்துடன் கலந்து வைக்கவேண்டும்.இந்த உர அளவினை ஒவ்வொரு வருடமும் இரண்டு மடங்காக அடுத்தடுத்த ஆண்டுகளில் இட வேண்டும். நான்காண்டு வயதுடைய மரம் ஒன்றிற்கு இடும் உர அளவான யூரியா 1.3 கி.கி, சூப்பர் பாஸ்பேட் 2.0கி.கி, பொட்டாஷ் 2.0 கி.கி, வேப்பம்புண்ணாக்கு 5.00 கி.கி, நன்கு மட்கிய தொழு உரம் 50.00 கி.கி ஆகிய உரங்களோடு தென்னை நுண்ணூட்ட திரவ உரத்தையும் மரம் ஒன்றிற்கு 200 மில்லி என்ற அளவில் மரத்தின் புதிய வேரினை தேர்வு செய்து அதன் நுனியை சீவிவிட்டு அடர்நெகிழி பைகளில் இத்திரவத்தையெடுத்து சீவப்பட்ட வேரின் நுனி இத்திரவத்தில் நன்கு மூழ்குமாறு வைத்து கட்டவேண்டும்.வீரிய ஒட்டு ரகங்களுக்கு மரம் ஒன்றிற்கு தழை சத்து வழங்கும் 500 கிராம் யூரியா, மணிச்சத்து வழங்கும் 375 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் சாம்பல் சத்து வழங்கும் 750 கிராம் பொட்டாஷ் உரத்தையும், வேப்பம்புண்ணாக்கு 1.5 கி.கி ஆகிய உரங்களை நன்கு மட்கிய 15 கி.கி தொழு உரத்துடன் கலந்து வைக்கவேண்டும். நான்காண்டு வயதுடைய மரம் ஒன்றிற்கு இடும் உர அளவான யூரியா 2.250 கி.கி, சூப்பர் பாஸ்பேட் 1.5 கி.கி, பொட்டாஷ் 3.0 கி.கி, வேப்பம்புண்ணாக்கு 5.00 கி.கி, நன்கு மட்கிய தொழு உரம் 60.00 கி.கி ஆகிய உரங்களோடு தென்னை நுண்ணூட்ட திரவ உரத்தையும் மரம் ஒன்றிற்கு 200 மில்லி என்ற அளவில் மரத்தின் புதிய வேரினை தேர்வு செய்து அதன் நுனியை சீவிவிட்டு அடர்நெகிழி பைகளில் இத்திரவத்தையெடுத்து சீவப்பட்ட வேரின் நுனி இத்திரவத்தில்நன்கு மூழ்குமாறு வைத்து கட்டவேண்டும். கட்டப்பட்ட ஒரு நாளில் இந்நுண்ணூட்ட திரவம் வேறால் உறிஞ்சப்பட்டுவிடும். இந்நுண்ணூட்ட திரவத்தை ஆறு மாதம் கழித்து மீண்டும் ஒரு முறை இதே அளவில் கட்டவேண்டும். இந்நுண்ணூட்ட திரவமானது பண்ணை மேலாளர், வேளாண் அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் என்ற முகவரியில் கிடைக்கும். தேவைப்படுவோர் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்….

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு