தெர்மாகோல் மாஜி மந்திரியை பார்த்து மிரண்டு போய் உள்ள அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஆட்சி போனாலும், கெத்து காட்டு தெர்மாகோல் மாஜி மந்திரியின் ஆட்டத்தை பார்த்து பயப்படும் அதிகாரிகளை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுரை  மாவட்டத்தில், இலை ஆட்சிக்காலத்தில் வைகை ஆற்றில் ஆளுங்கட்சியினர் மணல்  கொள்ளையில் தீவிரமாக ஈடுபட்டனர். என்னதான் அப்போது அரசு கெடுபிடி  இருந்தாலும், அதுபற்றி கவலைப்படாமல் இலை தரப்பினர் தொடர்ந்து இதில்  ஈடுபட்டனர். இதற்கு மறைமுகமாக அப்போதைய உதயமான மாஜி அமைச்சர் மற்றும்  அதிகாரிகள், போலீசார் உடந்தையாக இருந்ததாக புகாரும் எழுந்தது. தமிழகத்தில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், மணல் கடத்தலுக்கு தடைவிதிக்கப்பட்டது. தமிழகம்  உள்ளிட்ட வெளிமாநிலத்திற்கு மணல் கடத்தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை  எடுத்து வருகிறது. மதுரை வைகை ஆற்றின் வடபகுதியான விளாங்குடி, பரவை  உள்ளிட்ட பகுதிகள் மதுரை மேற்கு தொகுதியில் வருகிறது. இங்கு எம்எல்ஏவாக தெர்மகோல் மாஜி அமைச்சரே இருப்பதால் தைரியம் பெற்ற இலை கட்சியினர், மதுரை வடக்கு தாலுகா  வருவாய்த்துறையினரை சரிக்கட்டி, இரவு நேரங்களில் வைகை ஆற்றில் இருந்து மணல்  லாரி, லாரியாக எடுத்துச் செல்கிறார்களாம். மதுரையில் மணலுக்கு தட்டுப்பாடு  நிலவும் இத்தருணத்தில், இலை கட்சி எம்எல்ஏ தொகுதியில் மணல் கொள்ளை தீவிரமாக  நடந்து வருவதை எதிர்க்க துணிவில்லாமல் வருவாய்த்துறையினர், கனிமவளத்துறையினர் மிரண்டு போய் அமைதி காக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோடியை கொட்டினால் செய்த தவறு சரியாகுமா…’’ என்று கேள்வியை போட்டார் பீட்டர் மாமா.‘‘கிடைத்த தகவலை முதல்ல சொல்றேன் கேளு… தமிழக மீன்வளத்துறை  மற்றும் மீனவர்கள் நலத்துறையில், இலை ஆட்சியில் 10 ஆண்டுகளாக எவ்வித  புதிய திட்டங்கள், மக்கள் நலன் சார்ந்த நவீன திட்டங்கள் கொண்டு வரவில்லையாம். அப்புறம், மீனவர்களின் நலனுக்காக, திமுக ஆட்சியில் கொண்டுவந்த நலவாரியம், தடைக்கால நிவாரணம் போன்ற திட்டங்களே  இன்றுவரை தொடர்கிறதாம். இலை ஆட்சியில் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் பணம் சுருட்டுவதில் காட்டிய ஆர்வத்தை தொலைநோக்கு திட்டங்களை தீட்டுவதில் காட்டவில்லையாம். இதுல முக்கியமானவர், கோடிகளை குவித்த ஒரு அதிகாரி தொலைநோக்கு திட்டங்களை எல்லாம் முடக்கி வைத்தாராம். இவரால் மீன்வளத்துறையில் தமிழகம் பின்னுக்குதான் போனதாம். மீன்வளத்துறையில்  இணையான பதவியில் இருந்த ‘ஸ்ட்ராங்கானவர்’ தான் இதற்கு காரணமாம். இவரது முறைகேடான செயல்களை கண்டித்து அனைத்து மீனவர்களும் கூட்டாக பல போராட்டங்களை  நடத்தியும், கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சரின் முழு ஆதரவால் ‘ஸ்டிராங்கானவர்’ மீது எந்த நடவடிக்கையும்  இல்லாமல் தவிடுபொடியாக்கிட்டாங்க. அப்புறம் அவருக்கு எதிராக இருந்த முக்கிய பைல்களை அழிச்சிட்டாங்களாம். அதுமட்டுமில்லாம, மீனவர்களுக்கு மானியவிலையில் இயந்திரம் வழங்கியது, மீன்கள் கொள்முதல்,  விற்பனை, அணைக்கட்டுகள் ஏலமிடுதல், வாக்கிடாக்கி முறைகேடு ஆகியவற்றில் இவர்  பிரதான குழு மெம்பராக இருந்து முறைகேடாக பல கோடிளை அள்ளினாராம். தனக்கு சப்போர்ட் செய்த மைக் மந்திரிக்கும் பல கோடிகளை தமிழகம் முழுவதும் வசூலித்து கொடுத்தாராம். இலை ஆட்சியில் பணம் செய்த மாயத்தால் புகார்கள் புஸ்வானமாக போனது. கரன்சியால் தவறு சரி செய்யப்பட்டதாம். ஆனால், புது ஆட்சியில், இவர் மீது மீனவர் அமைப்புகள், தலைவர்கள், மீன்வளர்ச்சி கழக  அலுவலர்கள் அளித்த புகார்கள், உயர் அதிகாரம் மிக்க அலுவலர்கள் அரசுக்கு அளித்த புகார்கள்  எல்லாம் ‘பரணையில்’ தூங்குதாம். புது ஆட்சி வந்தவுடன் பல கோடிகளை கொடுத்து மீண்டும் அதே பதவிக்கு வர பேரம் பேசிக் கொண்டிருப்பதாக தகவல் ஓடிக் கொண்டு இருக்காம். அதுவும் எத்தனை கோடிகளையும் கொட்டி கொடுத்து அந்த ஸ்பெஷல் பதவியை  பிடிக்க வலைவீசுகிறாராம். இவர் மீதான கோப்பு முதல்வரின் பார்வைக்கு சென்று  உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. முதல்பார்வைக்கு போனால்தான் மீனவர்களுக்கும், மீன் வளத்துறைக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இல்ைலயேல் இத்துறை மீண்டும் இருளுக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது என்கிறார்கள், மீனவர்களும், அத்துறையில் பணியாற்றும் ஊழியர்களும்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போலிகள் லட்சங்களாக மாற்றும் டெக்னிக் என்ன…’’ – சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டம் முதல் பெயரான கீழ் தாலுகாவில் காலியாக இருந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டதாம். இதில் மொத்தம் 1000 பேர் விண்ணப்பம் செய்ததில் தகுதியானவர்களில் 594 பேருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 3 நாட்கள் நேர்காணலும் நடத்தப்பட்டதாம். இதில் கீழ் தாலுக்காவை சேராத 9 நபர்கள் உள்பட 19 பேருக்கு 19 இடங்களுக்கும் பணி நியமன ஆணை கடந்த 11ம் தேதி வெளியானதாம். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதாம். இந்த பணி நியமன ஆணையை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பாமல் அவர்களுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பப்பட்டதாம். இந்த விவகாரம் தாலுகா அலுவலக ஊழியர்கள் மூலமாக சமீபத்தில் எப்படியோ வெளியில் லீக் ஆனதாம். இந்த தகவல் மாவட்ட உயரதிகாரிக்கு ரகசியமாக சென்றதால் அவர் டென்ஷன் ஆகிவிட்டாராம்.இதுதொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்த உத்தரவிட்டாராம். இந்த ரகசிய விசாரணையில் தாசில்தார் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டவராம். 19 பேரிடமும் பேரம் பேசிய பணத்தையும் தாசில்தார் வாங்கியது தெரிய வந்தது. தற்போது 19 பேரின் விஏஓ பணி நியமன ஆணை ரத்து செய்யப்பட்டு இருப்பதால் லட்ச கணக்கில் வாங்கிய தாசில்தார் கிலியில் உள்ளாராம். இப்படி லட்சங்களை சம்பாதிக்க போலி ஆட்களை பயன்படுத்தினால் வேலைக்கு வேட்டு என்பதுதான் நிதர்சனமான உண்மை…’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

தேனிக்காரர் ஆதரவு மாஜி அமைச்சரை திரைமறைவில் கண்காணிக்கும் சேலத்துக்காரர் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சேலத்துக்காரர் டீம் மேல் சீற்றத்துடன் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க குழு போடும் முடிவில் இருக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா