தென்மேற்கு பருவமழை தொடக்கம் ஆண்டிபட்டி பகுதியில் உழவு பணிகள் தீவிரம்

ஆண்டிபட்டி : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில், விவசாயிகள் நிலத்தை உழவு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து எற்பட்டு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதால் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பருவமழையால் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், ஒடைகள், குளங்கள், கண்மாய்களில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதில் ஆண்டிபட்டி சுற்றியுள்ள கிராமங்களிலும், மேற்கு தொடர்ச்சியை ஒட்டியுள்ள கிராமங்களிலும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. ஆண்டிபட்டி பகுதியில் முருங்கை, வாழை, தக்காளி, கத்தரி, வெண்டி, மிளகாய், பருத்தி சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் மல்லிகை, சம்மங்கி, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூ ரகங்களும் சாகுபடி செய்து வருகின்றனர்.தென்மேற்கு பருவமழை, மாவட்டத்தில் உள்ள மானாவாரிய பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பருவமழை தொடங்குவதற்கு முன்பும் அல்லது தொடங்கிய உடனே நிலத்தை உழவு செய்து தயார் நிலையில் விவசாயிகள் வைத்திருப்பார்கள். அதேபோல் இந்த ஆண்டும் பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் நிலத்தை உழவு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆண்டிபட்டி சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், விவசாயிகள் நிலத்தை உழவு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து கைகொடுத்த நிலையில், இந்த ஆண்டும் பருவமழை கைகொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர் செய்ய 100 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்