தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, தந்தையை தேடி சென்ற சிறுவன், ஆற்றில் அடித்து செல்லப்பட்டான். தீயணைப்பு துறையினர் அவனை சடலமாக மீட்டனர். போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லகுடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன். பண்ணந்தூரில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன் ரிஷிதரன்(7) பண்ணந்தூர் தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். சகாதேவன் தினமும் செல்லகுடப்பட்டி தென்பெண்ணை ஆற்றின் வழியாக, பேக்கரிக்கு ரிஷிதரனை அழைத்து செல்வது வழக்கம். தற்போது, கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று முன்தினம் சகாதேவன் தனது மகனை வீட்டிலேயே விட்டு விட்டு சென்றுள்ளார். தந்தை தன்னை விட்டு சென்றதால், ரிஷிதரன் தினமும் செல்லும் தென்பெண்ணை ஆற்றை கடந்து சென்றுள்ளான். அப்போது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், பாரூர் போலீசார் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி சிறுவனை தேடினர். பின்னர், மதியம் பாரூர் நீர்த்தேக்கம் அருகில் சடலமாக மீட்டனர். இதையடுத்து, பாரூர் போலீசார் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை தேடி சென்ற சிறுவன், ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆண்டிமடம் கிராம சபை கூட்டம்

60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய விவசாயி மீட்பு

அணைக்குடம் கிராமத்தில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு வரும்