தென்னை மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வல்லுநர்கள் குழு ஆய்வு

 

மதுக்கரை: கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கண்காணிப்பு குழுவை சேர்ந்த ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர்கள் லதா, அருள் பிரகாஷ் ஆகியோர் நேற்று திருமலையம் பாளையம் பகுதியில் தென்னை சாகுபடி செய்து வரும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களின் தென்னை மரங்களை கள ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.

அப்போது அவர்கள் தென்னை விவசாயிகளிடம் பேசுகையில்,“ஒரு மரத்திற்கு ஒரு கிலோ யூரியா, 2.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாஸ், 5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு, 50 கிலோ தொழுஉரம் கலந்து அதனை மரத்திலிருந்து 3 அடி தள்ளி அரைவட்ட வடிவில் முக்கால் அடி அளவுக்கு குழி பறித்து இடவேண்டும். வருடந்தோறும் ஒரு மரத்துக்கு ஒரு கிலோ தென்னை நுண்ணூட்டம் இட வேண்டும். அதேபோல், அசோஸ்பைரில்லம் 20 மில்லி, பாஸ்போபாக்டிரியா 20 மிலி இடுவதன் மூலம் தென்னை மரம் நோய் மற்றும் பூச்சி தாக்குதலிருந்து தப்பிக்க எதிர்ப்பு திறன் பெற்று மரம் செழிப்புடன் இருக்கும்.

அதேபோல், பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த ஒரு மரத்திற்கு ஆண்டு தோறும் 200 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது சூடோமோனசுடன் தொழு உரம் கலந்து மரத்தை சுற்றியும் இட வேண்டும். இதனால், வேர்வாடல் நோய்கள், வேர் பகுதியில் சாறு வடிதல் போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படும். மேலும், தென்னை டானிக் ஒரு மரத்துக்கு 200 மில்லி வீதம் வேறு வழியாக செலுத்த வேண்டும். தென்னந்தோப்புகளில் வருடத்துக்கு ஒரு முறை பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு மற்றும் தக்கைப் பூண்டு, பயறு வகைகள் பயிரிட்டு பூ பிடிக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்தால் மண் வளம் பாதுகாத்து தென்னையில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதை கட்டுப்படுத்தலாம் என்று கூறினர். இந்த கள ஆய்வில் வேளாண்மை துணை இயக்குனர் புனிதா உள்ளிட்ட வேளாண் துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது