தென்னையில் ஊடுபயிராக கோகோ

ஏக்கருக்கு செலவு ரூ.10 ஆயிரம்… ரூ.60 ஆயிரம் வருவாய்…பருவநிலைக்கு ஏற்றவகையில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது குமரி சுற்றுப்பகுதியில். குறைந்த நிலப்பரப்பில் பல பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபத்தை ஈட்டும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பாக நெல், வாழை, ரப்பர், தென்னை அதிகமாக இருந்தாலும், தென்னை பயிர்களுக்கு இடையே ஊடு பயிராக பல்வேறு தோட்டக்கலை பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.கோகோ, ஜாதிக்காய், மிளகு, வாழை  ஊடுபயிராக சாகுபடி அதிகம் பயிர் செய்கின்றார்கள். இதில் முக்கிய இடத்தை வாழை பெற்றாலும், பல விவசாயிகள் கோகோ பயிர்களையும் ஊடுபயிராக பயிரிட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் 121 ஹெக்டேர் பரப்பளவில் கோகோ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவதால், கோகோவின் பயன்பாடும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப உற்பத்தி குறைவாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் சில விவசாயிகள் குறைந்த நிலப்பரப்பில் கோகோ சாகுபடி செய்து அதிக லாபத்தை பெற்று வருகின்றனர். கேசவன் புதூர் பகுதியை ேசர்ந்த, கேரள மாநில போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக இருந்து ஓய்வு பெற்ற பிள்ளையார் பிள்ளை என்ற உழவர் 80 சென்ட் தென்னந்தோப்பில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து அதிக லாபம் பெற்றுள்ளார்.“குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்குதுங்க தம்பி’ என்று பேசத்துவங்கினார் பிள்ளையார் பிள்ளை.  போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக இருந்த காலத்துல இருந்தே விவசாயம் செய்துகிட்டு வரேன். கேசவன்புதூர் அருகே உள்ள சானக்குடி கோணத்தில் 80 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 80 தென்னைகள் உள்ளன. தேங்காய் காய்த்தாலும், குரங்கு தொல்லையால் போதுமான அளவு தேங்காய் மகசூலி் கிடைக்கவில்லை.  வெட்டுக்கூலி உள்பட அனைத்து செலவுகளையும் பார்க்கும்போது தென்னையில் போதிய அளவு வருமானம் கிடைப்பதில்லை. இதனால் தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக வேறு பயிர்கள் சாகுபடி செய்ய முடிவு செய்தேன்.  என்ன பயிர் சாகுபடி செய்வது என குழப்பாக இருந்தது. திருப்பதிசாரம் ஆராய்ச்சி மையத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் நான் கலந்துகொண்டேன். அப்போது தென்னை ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோகோ சாகுபடிக்கு வண்டல் மண், செம்மண் உகந்தது என தெரியவந்தது. எனது தோப்பு வண்டல் மண் நிறைந்தது. இதனால் தென்னைகளுக்கு இடையே கோகோ போடலாம் என முடிவு செய்தேன். இதற்காக தோட்டக்கலைத்துறை மூலம் சுமார் 250 கோகோ கன்றுகளை வாங்கி கடந்த 8 வருடத்திற்கு முன்பு நட்டு வைத்தேன். கோகோவிற்கு தண்ணீர் அதிக அளவு தேவைப்படாது. இதுபோல் அதிக அளவு உரமும் தேவைப்படாது. பராமரிப்பும் மிகக் குறைவு. இதனால் நடவு செய்து இரண்டாம் வருடத்தில் செடியில் பூக்கத் தொடங்கியது. 3வது வருடத்தில் இருந்து கோகோ மரத்தில் காய்கள்  நன்றாகவே கிடைக்க தொடங்கின.ஜூலை முதல் ஆகஸ்டு மாதத்திற்குள் கோகோ செடியில் தேவையில்லாத கிளைகளை அகற்றிவிடவேண்டும். குறிப்பாக செடி 10 அடி உயரத்திற்கு மேல் வளராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 10 அடிக்கு மேல் வளர்ந்தால், மகசூல் கட்டாயம் குறையும். தேவையில்லாத கிளைகளை வெட்டுவதால் கோகோ காய்கள் தண்டுப் பகுதியில் அதிக அளவு காய்க்கும். ஜூலை முதல் டிசம்பர் மாதத்தில் அதிக அளவு காய்கள் கிடைக்கும். நல்ல மகசூல் பார்க்கலாம். காய்கள் பழுத்தவுடன் அதனை பறித்து, விதைகளை தனியாக பிரித்து எடுத்து, அதனை காயவைத்து விற்பனை செய்யலாம். தற்போது ஒரு கிலோ கோகோ விதை ரூ.210க்கு கொள்முதல் செய்கின்றனர். எனக்கு மொத்தம் 80 சென்ட் நிலம் உள்ளது.  வருடத்திற்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை கோகோ விதைகள் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. கோகோ செடிகளுக்கு உரம் மற்றும் பராமரிப்பு செலவு என சுமார் ரூ.10 ஆயிரம் மட்டுமே செலவு ஆனது. முறையாக பராமரித்து செடிகளை பார்த்துக்கொண்டால்,  தொடர்ந்து 40 வருடங்களுக்கு மகசூல் தரும். மார்க்கெட்டில் இதன் தேவைகள் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் கோகோ சாகுபடி செய்யலாம்’’ என்கிறார்.உரம் இடும் முறைகோகோ செடிக்கு வருடத்திற்கு இருமுறை உரம் இடவேண்டும். செடியில் இருந்து ஒரு மீட்டர் தூரத்திற்கு செடியை சுற்றி குழிதோண்டி அதில் சூப்பர்பாஸ்பேட், பொட்டாஷ், யூரியா வைக்க வேண்டும். ஒரு செடிக்கு ஒருமுறை 3 உரங்களையும் சேர்த்து 2 கிலோவாக போடலாம். இது தவிர ஒரு செடியில் இருந்து ஒரு வருடத்திற்கு இரண்டு கட்டு இலைகள் கிடைக்கும். இந்த இலைகள் மக்கி, தென்னை மற்றும் கோகோ செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்.  கோகோ காயில் இருந்து விதைகளை தனியாக பிரித்து எடுத்தபிறகு கோகோ காயின் தோடுகளை தோட்டத்தில் பள்ளம்தோண்டி மூடினால், அதுவும் மக்கி உரமாகக் கிடைக்கும். தொடர்புக்கு: பிள்ளையார்பிள்ளை 94869 54834தொகுப்பு: ச.உமாசங்கர்  படங்கள்: ஆர்.மணிகண்டன்

Related posts

பாரம்பரிய நெல் விதைகளைப் பரவலாக்கும் பட்டதாரி!

இந்திய விவசாயத்தில் இயந்திரங்களின் தாக்கமும் வளர்ச்சியும்!

தாய்லாந்து ரக பப்பாளி “ரெட்லேடி”