தென்தாமரைக்குளம் வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரத்தை பிடித்து இழுத்து சுயேட்சை வேட்பாளரின் முகவர் தகராறு

தென்தாமரைக்குளம், ஏப்.20: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்தாமரைகுளம் அரசு எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது சுயேட்சை வேட்பாளர் வினோ ஜெபசீலனின் முதன்மை பூத் ஏஜன்ட் எனக்கூறி நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (72) என்பவர் வந்துள்ளார். அவர் இங்கு மின்னணு இயந்திரம் இருக்கின்ற விதம் சரி இல்லை என்று கூறி அங்கிருந்த வாக்குப்பதிவு தலைமை அலுவலரிடம் தகராறு செய்தார். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பிடித்து இழுத்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இயந்திர செயல்பாடு முடங்கியது. இதனால் மதியம் 1.15 மணிமுதல் 1.50 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறாமல் முடங்கியது.

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான தகவல் தெரியவந்ததும் வாக்குச்சாவடி முன்பு திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜவினர் குவிந்தனர். வாக்குச்சாவடியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பிடித்து இழுத்த ஜெகதீசன் மற்றும் 2 பா.ஜ.வினரை தென்தாமரைக்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் காவல்நிலையத்திற்கு திமுக நிர்வாகிகள் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தாமரைபாரதி, பாபு உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள் போலீசாரிடம் மின்னணு இயந்திரத்தை பிடித்து இழுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனும் அங்கு வந்தார். போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் 35 நிமிடங்கள் வாக்குப்பதிவு முடங்கியது. பின்னர் பிற்பகல் 1.50 மணி முதல் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி வழக்கம்போல் நடந்தது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு