Sunday, July 21, 2024
Home » தூள் கிளப்பும் தூய்மை பணியாளர்கள் இயற்கை உரம் தயாரிப்பில் அசத்தும் மாநகராட்சி-1 கிலோ ஒரு ரூபாய் – இதுவரை 1,570 டன் விற்பனை

தூள் கிளப்பும் தூய்மை பணியாளர்கள் இயற்கை உரம் தயாரிப்பில் அசத்தும் மாநகராட்சி-1 கிலோ ஒரு ரூபாய் – இதுவரை 1,570 டன் விற்பனை

by kannappan

நாகர்கோவில் :  இயற்கை உரம் தயாரிப்பில் நாகர்கோவில் மாநகராட்சி புதிய முத்திரை பதித்துள்ளது. இதுவரை a15.70 லட்சத்துக்கு உரம் விற்பனையாகி உள்ளது.நாகர்கோவில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் 14.5 ஏக்கரில் அமைந்துள்ள வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தினமும் சுமார் 140 டன் வரை குப்பைகள் சேர்ந்ததால், வலம்புரிவிளையில் மலைபோல் குப்பைகள் குவிந்தன. இந்த உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் தரப்பிலும், அரசியல் கட்சியினர் சார்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. உரக்கிடங்கில் அவ்வப்போது தீ விபத்தும் ஏற்படுவது வாடிக்கையானது. தீ விபத்தின் போது வெளிவரும் புகையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். குப்பை கிடங்கை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட்டன. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் வலம்புரிவிளை உரக்கிடங்கில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்த்து, அதற்கு மாற்று வழி செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த பகுதிலேயே உரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆணையர் சரவணக்குமார் இந்த நடவடிக்கையை தொடங்க, பின்னர் பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், இதற்கு புத்துயிர் அளிக்க தொடங்கினர். மாநகர பகுதியில் வடசேரி ராஜபாதை, வடசேரி பஸ் நிலையம் அருகே, வடசேரி காய்கறி சந்தை, வட்டவிளை மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், ஆசாரிப்பள்ளம், பொன்னப்பநாடார் காலனி, புளியடி, கோட்டார் உள்பட 11 இடங்களில் குப்பைகளை உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது. மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகள் இந்த நுண்ணுயிர் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக நுண்ணுயிர் உரக்கிடங்கிலும் தூய்ைம பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.  மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான இயந்திரத்தில் அரவை செய்யப்படுகிறது. பின்னர் தொட்டியில் காய வைத்து உரமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு நுண் செயலாக்க மையத்தில் 10 ல் இருந்து 20 தொட்டிகள் வரை கட்டப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் உரம் ஒரு கிலோ a1 க்கு விற்பனை ஆகிறது. வாழைத் தோட்டம், ரப்பர் தோட்டம், தென்னந்தோப்புகள் உள்ளிட்டவற்றுக்கு டன் கணக்கில் இந்த உரத்தை விவசாயிகள் வாங்கி செல்கிறார்கள். இயற்கையான உரம் என்பதால், விவசாயிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது.நுண் உரம் செயலாக்க மையத்துக்கு வரும் மக்கும் குப்பைகளை ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி, அவற்றில் இரும்பு துண்டுகள், மேலும் மக்காத கழிவுகள் இருக்கிறதா? என்பதை  பணியாளர்கள் சோதனை செய்கிறார்கள். இரும்பு துண்டுகளை கண்டுபிடிக்க காந்தம் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இரும்பு துண்டுகள், பிளாஸ்டிக்  தொடர்பான எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின், அவற்றை அரவை இயந்திரங்களில் செலுத்துகிறார்கள்.சுமார் 40 நாட்கள் வரை அதற்கான தொட்டியில் காய வைக்கப்படுகிறது. பின்னர் உரமாக விற்பனை செய்கிறார்கள்.  1 கிலோ a1 க்கு விற்பனையாகிறது. தவுடு, உமி, சாம்பல் போன்றவை கலந்து, முழுக்க, முழுக்க இயற்கை உரமாக இருப்பதால் வீடுகளில் உள்ள தோட்டங்களுக்கு அதிகளவில் வாங்குகிறார்கள். இதன் மூலம் ரசாயனம் கலந்த உரங்களால் ஏற்படும் தீமைகளில் இருந்து தப்ப முடியும். இதுவரை மொத்தம் 11 இடங்களில் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையம் மூலம் சுமார் 1570 டன் உரம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு a15 லட்சத்து 70 ஆயிரத்து 745 வசூலாகி உள்ளது. உரத்தை 5 கிலோ பைகளில் அடைத்தும் விற்பனை செய்கிறார்கள். பையின் விலை a5 என்பதால் 5 கிலோ பை a10 ஆகும் என்று பணியாளர்கள் கூறினர்.கோழிகள் வளர்ப்புநுண் உரம் செயலாக்க மையத்தில் கழிவுகள்  அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்ட பின், தொட்டிகளில் காய வைக்கின்றன. அப்போது அதில் ஏராளமான புழுக்கள் உருவாகும். இந்த புழுக்களை உட்கொள்வதற்காக கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாட்டுக்கோழிகள், வான் கோழிகள், கருப்பு கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் குப்பைகளில் உள்ள புழுக்களை உட்கொள்கின்றன. ஈ தொல்லைகளில் இருந்து தப்ப, 90 லிட்டர் தண்ணீர், 5 கிலோ வெல்லம், 2 லிட்டர் தயிர் கொண்டு கரைசல் தயாரித்து ஸ்பிரே ஆக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த கழிவுகளில் ஈக்கள் இருப்பதில்லை. தரம் பிரித்து கொடுங்கள்பழக்கழிவுகள், காய்கறி கழிவுகள், மலர் கழிவுகள், இறைச்சி மற்றும் மீன் கழிவுகள், முட்டை ஓடு, தோட்டக்கழிவுகள் மக்கும் கழிவுகளாகும். நெகிழி, பாலித்தீன் பைகள், கண்ணாடி, தெர்மாகோல், காகிதம், அட்டை, இரும்பு துண்டுகள், பழைய துணி, மர சாமான்கள், ரப்பர் மற்றும் தோல் பொருட்கள், எலக்ட்ரானிக் கழிவுகள் மக்காத கழிவுகள் ஆகும். சானிட்டரி நாப்கின், டயாப்பர்கள், வர்ணம் மற்றும் பூச்சு கழிவுகள், எண்ணெய் மற்றும் எண்ணெய் கலன்கள், பயன்படுத்திய மற்றும் சேதமடைந்த மின் கலன்கள், பிளேடு, சேவிங் செட், சிரிஞ்ச் போன்றவைகள், பூச்சி கொல்லி கலன்கள், மருத்துவ மற்றும் காலாவதியான மருத்துவ கழிவுகள் அபாயகரமான கழிவுகள் ஆகும். மக்கள் தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்பது தூய்மை பணியாளர்களின் வேண்டுகோள் ஆகும். பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைஉரம் விற்பனையை கண்காணிக்கும் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் கூறுகையில், இயற்கை உரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆணையர் ஆஷா அஜித், மாநகர நகர் நல அலுலவர் டாக்டர் விஜய் சந்திரன் ஆகியோர் தொடர்ந்து பணியாளர்களை ஊக்குவித்து வருகிறார்கள். அவ்வப்போது, துப்புரவு பணியாளர்கள் மற்றும் அந்த செயலாக்க மையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கையுறை மற்றும் உபகரணங்கள் கொண்டு தான் குப்பைகளை அள்ள வேண்டும் எனவும் ஆணையர் அறிவுறுத்தி இருக்கிறார் என்றார். …

You may also like

Leave a Comment

5 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi