தூய்மை பணியாளருக்கு 2 வருடமாக சம்பள பாக்கி ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம், கடம்பத்தூர் ஒன்றியம், இலுப்பூர் ஊராட்சியின் தூய்மை பணியாளர் செல்வி புகார் மனு கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு: கடம்பத்தூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சியில் நான் 110 விதியின் கீழ் தூய்மை பணியாளராக தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு முதல் வேலை செய்து வருகிறேன். கடந்த 2 வருடத்திற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற சுதாலட்சுமி மற்றும் அவரது கணவர் ரூபசத்தியா, இவரது சகோதரர் சத்தியமூர்த்தி ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக தினமும் தூய்மை பணி செய்து வரும் எனக்கு கடந்த 2 வருடமாக சம்பளம் வழங்காமல் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து நான் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்து நான் கடந்த 8.12.2021 அன்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற நிதிக்குழு தலைவரும், காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவருமான கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு கொடுத்தேன். அப்போது மனுவை பெற்றுக்கொண்ட அவர் மனுவின் மீது உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பரிந்துரை செய்தார். ஆனால் இது நாள் வரையில் எனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே தாங்கள் உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏழை தூய்மை பணியாளரான எனக்கு சம்பளம் வழங்குமாறும், உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக கடந்த 2 வருடமாக சம்பளம் வழங்காமல் பழிவாங்கி வரும் ஊராட்சி தலைவர் சுதாலட்சுமி மற்றும் அவரது கணவர் ரூபசத்தியா, இவரது சகோதரர் சத்தியமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் உறுதியளித்தார். அப்போது காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் உடனிருந்தார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்