தூத்துக்குடி பனிமய மாதா தங்க தேரை செப்.8ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் செல்பி எடுத்து மகிழ்ச்சி

தூத்துக்குடி,ஆக.7: தூத்துக்குடி பனிமய மாதா தங்க தேரை செப்டம்பர் 8ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பக்தர்கள் ஆலய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்க தேருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் இந்தண்டு 441ம் திருவிழா நடந்துள்ளது. தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16வது முறையாக தங்கத்தேர் பவனி தற்போது நடந்து முடிந்துள்ளது. திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா பேராலய 431ம் ஆண்டு திருவிழா மற்றும் பேராலயம் எழுப்பப்பட்டதன் 300ம் ஆண்டு நினைவாக 15வது தங்கத்தேர் பவனி 2013ம் ஆண்டு நடந்தது. இத்திருவிழா நடந்து முடிந்ததும் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலும் பொதுமக்கள் பார்வைக்காக பனிமய அன்னையின் தங்க தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு திருவிழா தங்க தேரோட்டம் நிறைவடைந்து பனிமய அன்னையின் தங்க தேர் ஆலய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி மாதா பிறந்த தினம் வருகிறது. இதனை முன்னிட்டு இந்த தங்க தேர் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரையில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்க தேரை தற்போது வெளியூர், வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருவதுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம்

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 441வது ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கடந்த 5ம் தேதி தங்த தேர் பவனி நடந்தது. இந்நிலையில் நேற்று (6ம்தேதி) நன்றியறிதல் நாள் விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலி பங்கு தந்தை திவாகர் தலைமையில் நடந்தது. பின்னர் காலை 6 மணிக்கு ஆலய உபகாரிகளுக்காக முதல் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலி பங்கு தந்தை குமார்ராஜா தலைமையில் நடந்தது. இதனையடுத்து திருவிழா கொடியிறக்கம் நடந்தது.
காலை 8மணிக்கு 3ம் திருப்பலி பங்கு தந்தை அகஸ்டின் தலைமையிலும், காலை 9.30 மணிக்கு பங்கு தந்தை ரீகன் தலைமையில் ஆங்கிலத்திலும் திருப்பலி நடந்தது. பகல் 12 மணிக்கு 5ம் திருப்பலி பங்கு தந்தை அமல் கொன்சால்வ்ஸ் தலைமையிலும், 6ம் திருப்பலி மாலை 5.30 மணிக்கு பங்கு தந்தை பெனோ தலைமையிலும் நடந்தது. தொடர்ந்து மாலையில் நற்கருணை ஆசீர் நடந்தது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்