தூத்துக்குடியில்4வது புத்தகத் திருவிழாநாளை மறுதினம் தொடங்குகிறது

தூத்துக்குடி, ஏப். 19: தூத்துக்குடியில் 4வது புத்தகத் திருவிழா, நாளை மறுதினம் (21ம் தேதி) தொடங்குவதாக கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார். தூத்துக்குடி – எட்டயபுரம் சாலையில், சங்கரப்பேரி விலக்கு பகுதியில், வரும் 21ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை 11 நாட்கள், 4வது புத்தக திருவிழா நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி 4வது புத்தகத்திருவிழா வரும் 21ம் தேதி தொடங்கி மே 1ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 28ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை நெய்தல் கலைத்திருவிழாவும் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள், 10 அரசுத்துறை அரங்குகள் மற்றும் நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்துகொள்ளும் வகையில் தனியாக 40 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

நமது மாவட்டத்தின் பெருமையை, தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பரம்பூர் ஆகியவற்றில் கிடைத்த முதுமக்கள் தாழி, பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது என்பது குறித்து மாதிரி செயல்வடிவம் அமைக்க இருக்கிறோம். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவ, மாணவியரை அனைத்து பெற்றோரும் புத்தகத்திருவிழாவுக்கு அழைத்து வர வேண்டும். புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்வதற்கு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாலை நேரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வருகை தந்து புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம், என்றார்.ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரின் நேர்முக உதவியாளர் பீவிஜான், செயற்பொறியாளர் அமலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு