தூத்துக்குடியில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் துவக்கிவைத்தார்

தூத்துக்குடி,டிச.3: தூத்துக்குடியில் நடந்த முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கிவைத்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட சிறப்பு முகாம் தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘இந்த சிறப்பு முகாமில், முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதற்கான அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேவைப்படுவோர் தங்களின் குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், ஆதார்கார்டு அசல் மற்றும் நகல் ஆகிய விவரங்களுடன் சென்று விண்ணப்பித்து மருத்துவ காப்பீடு அட்டையை பெற்று பயனடையலாம். கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பவர்களும் புதுப்பித்துக் கொள்ளலாம்’’ என்றார்.

முன்னதாக, உப்பள தொழிலாளர்கள், மீனவர்கள் பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத்திட்ட சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து சங்க நிர்வாகம் மூலமும், பொதுநல அமைப்பு மூலமும் முறையாக தெரிவிக்கப்பட்டு, பொதுமக்களும் பங்கு கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த முகாமில், பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்ட இலவச மருத்துவ முகாமும் நடந்தது. அதில் சர்க்கரை நோய், இரத்த பரிசோதனை, ரத்த அழுத்த சோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாம் தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

முகாமில் சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர் பொற்செல்வன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மீனவரணி மாவட்ட அமைப்பாளர் அந்தோனி ஸ்டாலின், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட மருத்துவரணித் தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் பொன்னப்பன், கந்தசாமி, அந்தோனி பிரகாஷ் மார்ஷலின், வைதேகி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் நவநீதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்