தூத்துக்குடியில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகன் கூலிப்படையாக செயல்பட்டு பலரை கொன்றது அம்பலம்: பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகன், தமிழகம் முழுவதும் கூலிப்படையாக செயல்பட்டு பலரை கொன்று குவித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி, திருமலையாபுரத்தை சேர்ந்தவர் துரைமுருகன் (42). பிரபல ரவுடியான இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்ளன. பாவூர்சத்திரத்தை சேர்ந்த பூ வியாபாரி முருகேசன் மகன் ஜெகதீஷ் கொலை வழக்கில், துரைமுருகனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி, முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் துரைமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை நேற்று முன்தினம் போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது அரிவாளால் தனிப்படை எஸ்ஐ ராஜபிரபு, ஏட்டு டேவிட்ராஜன் ஆகியோரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் எஸ்ஐ ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டதில், துரைமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கூட்டாளி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அயன்புத்தூர் நெசவாளர் காலனியை சேர்ந்த அற்புத ஆரோக்கியராஜ் (41) கைது செய்யப்பட்டார். தப்பியோடிய விஸ்வா, ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். என்கவுன்டரில் பலியான துரைமுருகன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த  2001 முதல் சிறுசிறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த துரைமுருகன்,  முதன்முறையாக தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சகோதரர்களுக்கு இடையே  ஏற்பட்ட நிலத்தகராறில் ஒருவரை வெட்டி கொலை செய்தார். மேலும் தனது அத்தை மகன் முருகன் என்பவரை கூட்டாளியாக சேர்த்து திருட்டு மற்றும் அடிதடியில் ஈடுபட்டு வந்தார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் அவரை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்துவிட்டார். இதனால் முருகனின் நெருங்கிய நண்பரான செல்வம், தன்னை பழிவாங்க கூடுமென கருதி அவரையும் கொன்று புதைத்தார். முருகனின் சகோதரர் ரகு மூலமும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென எண்ணி அவரையும் கொன்று புதைத்துள்ளார். பின்னர் சிறைகளில் ஏற்பட்ட  பழக்கத்தால்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூலிப்படையாக செயல்பட்டு  சிலரை கொலை  செய்துள்ளார். மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார். துரைமுருகனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால்  வேறொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி உள்ளார். அவரை தாய்  உள்ளிட்ட குடும்பத்தினர் ஏற்காததாலும், துரைமுருகனின் குற்ற செயல்களால்  பயந்து, பயந்து வாழ முடியாமல் அவரும் பிரிந்து சென்று விட்டதாக  கூறப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.மாஜிஸ்திரேட் விசாரணைதூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துரைமுருகன் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. முன்னதாக தூத்துக்குடி ஜேஎம்2 மாஜிஸ்திரேட் உமாதேவி, நேரில் சென்று துரைமுருகனின் தாய் சந்தனம்மாள், சகோதரிகள் கன்னியம்மாள், ராமலெட்சுமி, ராதாலெட்சுமி, முருகேஸ்வரி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார். தொடர்ந்து துரைமுருகன் வெட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் எஸ்ஐ ராஜபிரபு, ஏட்டு டேவிட்ராஜன் ஆகியோரிடமும் மாஜிஸ்திரேட் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தார். துரைமுருகனின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சிதம்பரநகர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.2009ல்தப்பியவர்2021ல் சிக்கினார்துரைமுருகனை, கடந்த 2009ல் என்கவுன்டர் செய்ய போலீசார் திட்டமிட்டனர். அப்போது கோர்ட்டில் சரணடைந்ததால் தப்பினார். கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த  துரைமுருகன், பாவூர்சத்திரம் வாலிபரை கொன்று புதைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்….

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் பணிக்கு நாளை நேர்காணல்

வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்க ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பு முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்