துவரங்குறிச்சியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

துவரங்குறிச்சி, ஆக.24: துவரங்குறிச்சியில் நடந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு என இரு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் துவரங்குறிச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி துவரங்குறிச்சி -நத்தம் நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இப்போட்டியில் சிறிய மற்றும் பெரிய மாடுகள் கலந்து கொண்டன. மாட்டு வண்டி பந்தயத்தை நேற்று காலை 8 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.

இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் துவரங்குறிச்சி பாலத்தில் இருந்து 7 கி.மீ தூரம் வரை சென்று திரும்பும் மாடுகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பந்தயத்தில் 13 பெரிய மாட்டு வண்டிகளும், 24 சிறிய வண்டி மாடுகளும் கலந்து கொண்டன. முதல் பரிசு மதுரை அவணியாபுரம் எஸ்.கே.மோகன் சாமி குமாருக்கு ரூ.50,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு மதுரை கீழவளவைச் சேர்ந்த சக்தி அம்பலத்துக்கு ரூ.40,000மும், மூன்றாம் பரிசு சிவகங்கை சின்ன மாங்குளம் நாட்டரசன் கோட்டை காவல்துறையைச் சேர்ந்த பழனிக்கு ரூ.30,000மும், நான்காம் பரிசு திருச்சி கீழையூர் நாராயணசாமிக்கு ரூ.10,000மும் வழங்கப்பட்டது.

இதேபோன்று சின்ன மாடுகளுக்கான முதல் பரிசு வாளியபாறை முனுேட்டை பொன்வீரன், இரண்டாம் பரிசு காரைக்குடி கருப்பன், மூன்றாம் பரிசு அவணியாபுரம் கணேசன், நான்காம் பரிசு நல்லாங்குடி பிரேம் காந்தி ஆகிய மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் கோவிந்தராஜன், செங்குட்டுவன், கவிஞர் சல்மா, ஒன்றிய செயலாளர்கள் சின்னடைக்கன், செல்வராஜ், ராமசாமி, ஒன்றியக்குழு தலைவர்கள் பழனியாண்டி, அமிர்தவள்ளி ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், பொன்னம்பட்டி நகர செயலாளர் மும்பை நாகராஜ், பொன்னம்பட்டி பேரூர் தலைவர் சரண்யா நாகராஜ், துணைத்தலைவர் ரதி ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு