துரித நடவடிக்கை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  இம்மழையின்போது, பேரிடருக்கு உள்ளாகும் மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டம், இந்த முறையும் தப்பவில்லை. இம்மாவட்டத்தில் கடந்த மூன்று  தினங்களாக விடிய விடிய மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில்,  சிதம்பரத்தில் 15.3 செ.மீ, சேத்தியாத்தோப்பில் 12.8 செ.மீ, அண்ணாமலை நகரில் 11.9 செ.மீ, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் 11.5  செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூரில் 5.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மில்லி மீட்டரை தாண்டி, சென்டி மீட்டரில் மழை பதிவாகி வருகிறது. மிதமான தொடர் மழை பெய்து வந்தாலும், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. சிதம்பரம்  சுற்றுவட்டார டெல்டா பாசன விளைநில பகுதிகளான பிச்சாவரம், தெற்கு திட்டையில் தண்ணீர் தேங்கியுள்ளது. காவிரி கடைமடை பகுதியாக உள்ள தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், உத்தமசோழமங்கலம், கீழச்சாவடி, கிள்ளை,  நஞ்சமகத்துவாழ்க்கை, கீழதிருக்கழிப்பாலை, மேலத்திருக்கழிப்பாலை, பிச்சாவரம், கணகரபட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உட்பட்ட நெல் வயல்களில் தற்போது சம்பா நடவு பணியும், நடவுக்காக நாற்றங்கால் பணியும் நடைபெற்று வருகிறது.தொடர்  மழையால், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், கடலில் வடியாமல் எதிர்த்து, பிச்சாவரம் சதுப்புநில காடுகள் வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நெல் வயல்களில் புகுந்துள்ளது. இதனால் நடவு மற்றும் நாற்றங்காலில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கியுள்ளன. சிதம்பரம்  உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மழை தண்ணீரும், கொள்ளிடம் தண்ணீரும் ஒன்றாக வயலில் தேங்கி நிற்பதால் நாற்றங்கால் முழுவதுமாக அழுகிவிட்டது. நடவு நட்டு 20 நாட்கள் ஆன நெற்பயிர்கள் மூழ்கி வீணாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பை கண்டறிந்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. மழை பொழிவு அதிகமாக பெய்யும் மாவட்டங்கள் குறித்து கணித்து,  முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனி அலுவலர்களை நியமித்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகங்களும் முழுவீச்சில் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. தற்போது பெய்துள்ள மழை காரணமாக இதுவரை 50 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் மூழ்கியுள்ளது. தொடர் மழை காரணமாக டெல்டாவில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையால் மகசூல் பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் துரித கதியில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. …

Related posts

வலுக்கும் போராட்டம்

பாரபட்சம்

விடியல் தந்த பயணம்