துப்பாக்கி, வெடிகுண்டு, கள்ளச்சாராயம் தயாரிப்பு என தவறான வீடியோக்கள் வெளியாவதால் யூ-டியூபை ஏன் தடை செய்யக்கூடாது?: சைபர் க்ரைம் டிஜிபி தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவு

* அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. * சட்டவிரோத வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?மதுரை: தவறான வீடியோக்கள் வெளியாவதால் யூடியூபை ஏன் தடை செய்யக்கூடாது  என கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட் கிளை, சைபர் க்ரைம் டிஜிபி தரப்பில்  அறிக்கையளிக்க உத்தரவிட்டுள்ளது.திருச்சியை சேர்ந்தவர்  யூடியூபர் துரைமுருகன். இவர் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக  திருப்பனந்தாள் போலீசார் கடந்தாண்டு கைது செய்தனர். இவ்வழக்கில் ஐகோர்ட்  மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதற்காக, இனிவரும் காலங்களில்  அவதூறாக பேச மாட்டேன் என துரைமுருகன் ஐகோர்ட் கிளையில்  உறுதிமொழி உத்தரவாதம் தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில், ஐகோர்ட்  கிளையில் அளித்த உறுதிமொழி உத்தரவாதத்தை மீறி தொடர்ந்து அவதூறு  ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து  செய்யக்கோரி திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், துரைமுருகன் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து  நீதிபதி கூறியதாவது: அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாக  பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. துரைமுருகன் என்ன தொழில்  செய்கிறார்? யூடியூபில் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதால் அவருக்கு  எவ்வளவு பணம் வருமானமாக கிடைக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். நாட்டு  வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற சட்டவிரோத வீடியோக்கள்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை  எடுத்துள்ளது? ஏடிஎம் மற்றும் வங்கி கொள்ளை தொடர்பான விபரங்களை யூடியூப்  மூலம் பார்த்து, தெரிந்து கொண்டு சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர். இதுபோன்ற  வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தடுக்க என்ன நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது?இதுபோன்ற தவறான வீடியோக்களை யூடியூப் நிறுவனம்  அப்படியே வெளியிடுமா? பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு தவறான  வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டே உள்ளனர். இதற்காக ஏன் யூடியூபை தடை  செய்யக்கூடாது? அதே நேரம் யூடியூபில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனாலும்,  இதுபோன்ற தவறான வீடியோக்கள் வெளியாவதை அரசு தடுக்க வேண்டாமா? யூடியூபை பார்த்து துப்பாக்கி தயாரித்தது, நாட்டு வெடிகுண்டு தயாரித்தது, கள்ளச்சாராயம் காய்ச்சியது என பல வகையான வழக்குகள் பதிவாகியுள்ளன.  இதையெல்லாம் எவ்வாறு தடுக்கப்போகிறோம்?இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு  உதவுவதற்காக வக்கீல் ராமகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். யூடியூபில்  வெளியாகும் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதை தடுப்பது தொடர்பான  சாத்தியக்கூறுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்து சைபர் க்ரைம்  டிஜிபி தரப்பில் தேவையான விரிவான விபரங்களை சேகரித்து தாக்கல் செய்ய  வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தார்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை