துபாயில் நடந்த தீ விபத்தில்உயிரிழந்த சங்கராபுரம் பகுதி வாலிபர்களின் உடல்களைசொந்த கிராமத்துக்கு கொண்டு வர வேண்டும்

சங்கராபுரம், ஏப். 18: துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 2 பேரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு முதல்வருக்கு உயிரிழந்த குடும்பத்தினரின் மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். துபாயின் தேரா என்ற இடத்தில் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இந்தியர்கள் 4 பேர் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் இருவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அப்துல் காதர் மகன் இமாம்காசிம் (36) மற்றும் கூடு (எ) முகமது ரஃபிக் (45) அந்த குடியிருப்பில் கிளீனர் மற்றும் பெயிண்டர், கார்ப்பரேட்டர் என பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளனர். கூடு (எ) முகமது ரஃபீக் அதே குடியிருப்பின் காவலாளியாக பணியாற்றியுள்ளார்.

அந்த தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற போது இருவரும் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். கூடு (எ) முகமது ரபிஃக்கிற்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இமாம் காசிம்க்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3வது குழந்தை பிறந்து 3 மாதங்கள் தான் ஆகின்றன. ரம்ஜான் முடிந்து குழந்தையை பார்க்க வீட்டுக்கு வருவதாக கூறினார். அதற்குள்ளே தான் இமாம் இறந்து விட்டார் என அவரது மனைவி கண்ணீருடன் கூறுகிறார். மேலும் சங்கராபுரம் அருகே உள்ள சொந்த ஊரான ராமராஜபுரம் கிராமத்துக்கு 2 பேரின் உடலையும் உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டுமென உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினரும், அக்கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்களும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை