துபாயிலிருந்து 2 விமானங்களில் சென்னைக்கு கடத்தி வந்த 3 கிலோ தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து 2 விமானங்களில் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.1.4 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருச்சி, ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் தங்கம் வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், நள்ளிரவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சுங்கச்சோதனை முடிந்தது வந்த பயணிகளை நிறுத்தி மீண்டும் சோதனையிட்டனர். அப்போது, துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகளில் இருந்து வந்த 3 விமான பயணிகளை சோதனையிட்டு, சந்தேகத்திற்கு இடமான 14 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்களின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர். அப்போது அதிகாலையில் துபாயில் இருந்து சென்னை வந்த ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ், எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஆகிய விமானங்களில் வந்த திருச்சியை சேர்ந்த சின்ன ராசு (38), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஜுலாவூதீன் (35) ஆகியோரது டிராலி டைப் சூட்கேஸ்களில் ரகசிய அறைகள் வைத்து தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். இருவரது சூட்கேஸ்களிலும் 30 தங்கக்கட்டிகள் இருந்தன. மொத்த எடை 3 கிலோ. சர்வதேச மதிப்பு ரூ.1.4 கோடி. தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் சந்தேகத்தில் நிறுத்தி வைத்திருந்த மற்ற பயணிகளை சோதனையிட்டதில், அவர்களில் ஒரு சிலரிடம் மட்டும் மிகக்குறைந்தளவில் தங்கம் இருந்தது. அவர்களின் அந்த தங்கத்திற்கு சுங்கத்தீர்வை வசூலித்து விட்டு அனுப்பினர். 3 கிலோ கடத்தல் தங்கக்கட்டிகளுடன் பிடிப்பட்ட கடத்தல் ஆசாமிகள் இருவரையும், தங்கக்கட்டிகளையும் மேல் நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். எதிர்பார்த்த அளவு தங்கம் சிக்காததால், கடத்தல் தங்கம் வழக்கை சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடமே ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அடுத்த சில நாட்களில் மீண்டும் இந்த அதிரடி சோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்