தீபாவளி போனஸ் ரூ.7000 கேட்டு ஆர்ப்பாட்டம்

 

கோவை, அக். 17: கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்து மஸ்தூர் சபா (எச்எம்எஸ்) சார்பில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், எச்எம்எஸ் மாநில துணைத்தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜாமணி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தீபாவளி போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பென்சன் பெற்றுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் முதல் ஆயுள் சான்றினை புதுப்பிக்க இயலாத இடையூறுகளை சரிசெய்ய வேண்டும். வயதான காலத்தில் சமூக பாதுகாப்பு கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வீடு கட்ட மானியம் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும். அனைத்து நல வாரியங்களும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை தொடர்பான மனு அளித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை