(தி.மலை) அம்மன் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு நள்ளிரவு பைக் ஆசாமி கைவரிசை திருவண்ணாமலை அருகே

திருவண்ணாமலை, ஆக.29: திருவண்ணாமலை அருகே அம்மன் கோயில் உண்டியல் உடைத்து பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தீபம் நகரில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை- வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோயில் தினசரி வழிபாடுகளை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று காலை வழக்கம் போல கோயில் பூசாரி வழிபாடு செய்வதற்காக கோயிலை திறந்தார். அப்போது, கோயிலின் இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைந்திருந்தது. மேலும், கோயிலில் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும், திருவண்ணாமலை தாலுகா போலீசார் விரைந்துச்சென்று விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு மாதங்களாக உண்டியல் திறக்கப்படாததால், சுமார் ₹10 ஆயிரத்துக்கும் அதிகமான காணிக்கை இருந்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி சோதனையிட்டனர். அப்போது, நள்ளிரவில் பைக்கில் வந்த ஒருவர் உண்டியலை உடைத்திருப்பது தெரியவந்தது. ஆனால், அவர் யார் என்ற அடையாளம் காண இயலவில்ைல. இது தொடர்பாக, போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை