தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம்.! 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தான் என்ற அகந்தையை அழிக்க சிவ பெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தீபத்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல், மாட வீதியில் நடை பெறும் சுவாமி வீதி உலா, வெள்ளித்தேரோட்டம், பஞ்ச ரதங்கள் பவனி ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன. அதற்கு மாற்றாக அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி உலா நடந்தது. அதிலும், பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தீபத்திருவிழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் , பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட சிறப்பு ெபாருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது . பின்னர் பரணி தீபமானது ஓடல், எக்காளம் இசை முழங்க அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. மேலும் வைகுந்த வாயில் வழியாக பரணி தீபம் காட்சியளித்தது. தீபவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668அடி உயரமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை, சில நொடிகள் மட்டும் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் ஆனந்த தாண்டவத்தில் காட்சியளிப்பார். அப்போது, கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் மட்டுமே கோயிலில் தரிசனம் செய்தனர். மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் 5 அடி உயரம், 130 கிலோ எடை கொண்ட செம்பால் ஆன மகாதீப கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயிரம் மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் ஆகியவை இன்றுகாலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. கோயிலுக்குள் செல்லவும், மலையேறவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலம் செல்ல உள்ளுர் பக்தர்கள் 5ஆயிரம் பேருக்கும், வெளியூர் பக்தர்கள் 15ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வருவதை தடுக்க வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலையார் கோயில், மாடவீதி, கிரிவலப்பாதை, தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது….

Related posts

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!