திவால் ஆனவன் யார் தெரியுமா?

இஸ்லாமிய வாழ்வியல்  பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில்(சரசயனம்) கிடக்கிறார். பாண்டவர்கள் கண்ணீரோடு நிற்கிறார்கள். பீஷ்மர் பாண்டவர்களுக்குச் சொன்ன ஓர் அறிவுரையைப் படித்ததும் இறைத்தூதர்  நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஓர் அருமையான பொன்மொழி நினைவுக்கு வந்தது.பீஷ்மர் பாண்டவர்களுக்குச்சொன்ன அறிவுரை இது:“நம்மைக் காரணமின்றி நிந்திப்பவர்கள் நமது பாவத்தில் ஒரு பங்கு எடுத்துக்கொள்கிறார்கள். அவ்வாறு எடுத்துக்கொள்வதன்றி அவர்கள் செய்த புண்ணியத்தில் ஒரு பங்கு நமக்குத் தருகிறார்கள்.”இதே கருத்தில் நபிகளார் அவர்களின் ஒரு நிறைமொழியும் உண்டு. “உங்களில் திவால் ஆனவர் யார் தெரியுமா?” என்று அந்த நபிமொழி தொடங்கும்.அந்த நபிமொழியின் சிறப்பை அறிந்தவர்கள் வசையை வாழ்த்தாகக்  கொள்வார்கள். பிறர் நம்மைத் திட்டினால் தேனாக எடுத்துக்கொள்வார்கள்.ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பார்த்து, “உங்களில் முஃப்லிஸ்(திவால்) ஆனவர் யார் தெரியுமா?” என்று கேட்டார்கள்.“யாரிடம் தங்கமும் வெள்ளியும்  அதாவது பொருட் செல்வம் இல்லையோ அவர்தாம் திவால் ஆனவர் என்று நபித்தோழர்கள் பதில் கூறினார்கள்.நபிகளார் விளக்கம் அளித்தார்கள் “என் சமுதாயத்திலிருந்து சிலர் மறுமையில் வருவார்கள். அவர்கள் தொழுகை, நோன்பு, ஜகாத்(தான தர்மங்கள்) போன்ற வழிபாடுகளில் ஈடுபட்டு நிறைய புண்ணியங்களுடன் வந்திருப்பார்கள்.“ஆனால் அதே சமயம் அவர்கள் சிலரைத் திட்டியிருப்பார்கள். சிலர்மீது அவதூறு கூறியிருப்பார்கள். மற்றவர்களின் சொத்தை அநியாயமாக விழுங்கியிருப்பார்கள். பிறரின் ரத்தத்தை ஓட்டியிருப்பார்கள். பிறரை அடித்திருப்பார்கள். அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் புண்ணியங்கள் பறிக்கப்பட்டு வழங்கப்படும். ஒரு கட்டத்தில் புண்ணியங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.  பரிகாரமாய் வழங்குவதற்குப் புண்ணியங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் பாவங்கள் இவர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இறுதியில் இவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள்.” (நூல்: முஸ்லிம்)“நம்மைக் காரணமின்றி நிந்திப்பவர்கள், திட்டியவர்கள், வசை பாடியவர்கள் தங்களின் புண்ணியங்களிலிருந்து ஒரு பங்கை நமக்குத் தருகிறார்கள்” எனும் பீஷ்மரின் அறிவுரைக்கு விரிவுரை எழுதியது போல் இந்த நபிமொழி அமைந்திருக்கிறது அல்லவா?மக்களின் உரிமைகளை வழங்கி, அடுத்தவர் மனங்களைப் புண்படுத்தாமல் வாழ்தலே சிறப்பாகும். இந்த உண்மையை உள்ளத்தில் இருத்தி, உலகில் வாழ்ந்தால், நாம் பாடுபட்டுச் சேர்த்த புண்ணியங்கள் மறுமையில் பறிபோகாமல் இருக்கும்.– சிராஜுல்ஹஸன்இந்த வார சிந்தனை“கொடுமை புரிவதிலிருந்து விலகி இருங்கள். ஏனெனில் கொடுமை மறுமை நாளில் (கொடுமையாளர்களுக்கு) இருளாக மாறிவிடும்.(நரகத்தில் தள்ளிவிடும்).”- நபிமொழி….

Related posts

உயரமான வாழ்விற்கு ஆழமான அஸ்திவாரம் தேவை

நவராத்திரி நாயகிகள்

இனிய இல்லறம் மலர விட்டுக்கொடுப்போம்!