தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம்

செம்பனார்கோயில்: தில்லையாடியில் வள்ளியம்மை நினைவு மண்டபத்தை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மணிமண்டபம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் ரூ.89.54 லட்சம் செலவில் விரைவில் நினைவக கட்டிடம் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வள்ளியம்மை நினைவு மண்டபத்தை நேற்று செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தில்லையாடி வள்ளியம்மை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சருக்கு, அப்பகுதி மக்கள் தில்லையாடி அருணாசலக்கவிராயர், தியாகி வள்ளியம்மை வாழ்க்கை வரலாறு புத்தகங்களை பரிசாக வழங்கினர். பின்னர் அமைச்சர், நினைவு மண்டபத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவருக்கு, நினைவு மண்டபத்தில் உள்ள வள்ளியம்மை புகைப்படங்கள் குறித்து வரலாற்று நினைவுகள் விளக்கி கூறப்பட்டது. பின்னர் அமைச்சர் சாமிநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செய்தித்துறை பராமரிப்பில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் 1971ம் ஆண்டு கலைஞரால் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு இருந்த ஆபத்தை துடைக்கின்ற வகையில் உயிர் தியாகம் செய்த வள்ளியம்மையின் நினைவை போற்றும் வகையில் தில்லையாடியில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவுப்படி ரூ.80 லட்சம் மதிப்பீட்டிற்கு மேல் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழிசை மூவருள் ஒருவரான அருணாசலக்கவிராயர் பிறந்த ஊரான தில்லையாடியில் அவருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மணிமண்டபம் அமைப்பதில் நாட்டம் செலுத்துவதை விட மக்களுக்கு பயன்படும் வகையிலான சமுதாய கூடங்கள், அரங்கங்கள் அமைப்பது உள்ளிட்டவைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக உள்ளது. அந்த வகையில் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை மக்கள் பயன்பாட்டுக்கு எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் ஆலோசனை மேற்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் அல்மாஸ் பேகம், திமுக ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல்மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கணேச குருக்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாரம் வழங்கினார். முன்னதாக அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை