திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

 

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது. இதில் உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, கல்யாண சுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் நேர்த்திக்கடன் வேண்டியவர்கள் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, இனிப்புகள் வழங்கினர். மேலும் சன்னதி தெருவில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன் தலைமையில் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

தொடர்ந்து மதியம் 2 மணிக்கு 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவம், இரவு கல்யாணசுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம் சார்பில் மருத்துவ முகாம், குடிநீர், நவீன நடமாடும் கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு, காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி