திருவொற்றியூரில் மாடு முட்டியதால் படுகாயமடைந்த பெண்ணின் தொடை பகுதி அழுகியது: மாநகராட்சி உதவ கோரிக்கை

 

சென்னை, ஜூன் 24: திருவொற்றியூரில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த பெண்ணின் தொடை பகுதி அழுகியதால் சென்னை மாநகராட்சி உதவ வேண்டும் என அவரது கணவர் கோரிக்கை வைத்துள்ளார். திருவொற்றியூர் அம்சா தோட்டம் 2வது தெருவை சேர்ந்தவர் வினோத். வேன் டிரைவர். இவரது மனைவி மதுமதி, கடந்த 16ம் தேதி தனது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு நடந்து சென்றார்.

அப்போது அங்கு சுற்றித்திரிந்த ஒரு எருமை மாடு, மதுமதியை வேகமாக முட்டி தூக்கி, சுமார் 50 மீட்டர் தூரம் தர தரவென இழுத்துச் சென்றது. மாடு முட்டியதில் காலில் பலத்த காயமடைந்த மதுமதியை உறவினர்கள் மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மதுமதியின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு 40 தையலுக்கு மேல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆன நிலையில், மதுமதியின் கால் தொடை பகுதி அழுகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலில் அழுகிய நிலையில் இருந்த சதைப்பகுதியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மேலும், அகற்றப்பட்ட சதைப்பகுதியில், மற்றொரு காலில் இருந்து சதைப் பகுதியை வெட்டி எடுத்துவைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வினோத் கூறுகையில், ‘‘தையலைப் பிரித்து பார்த்ததும் கால் பகுதியில் அழுகி இருந்தது தெரியவந்தது. மற்றொரு காலில் இருந்து சதையை எடுத்து இந்த காலில் வைத்து அறுவை சிகிச்சை மீண்டும் செய்ய வேண்டும் என்றார்கள். ஏற்கனவே ரூ.1 லட்சம் வரை செலவு செய்துவிட்டேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்ததால் அதைவைத்து எப்படியோ சமாளித்துவிட்டேன். இதற்கும் மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அரசாங்கம் எதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். மனைவியின் கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் உதவ வேண்டும்,’’ என்றார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு