திருவில்லிபுத்தூர் பகுதியில் புதிய 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாடு அதிகரிப்பு: கடைகளில் வாங்குவதால் மக்கள் நிம்மதி

 

திருவில்லிபுத்தூர், பிப். 16: திருவில்லிபுத்தூர் கடைகளிலும், வியாபார நிறுவனங்களிலும் புதிய 10 ரூபாய் நாணயங்களின் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. கடைகள், வியாபார நிறுவனங்களில் பெற்றுக் கொள்வதால் பொதுமக்களும் அவற்றை வாங்கிச் செல்கின்றனர். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அறிவிப்பு வெளியான பின்னரும் திருவில்லிபுத்தூர் நகரில் வியாபாரா நிறுவனங்கள் மற்றும் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு வர்த்தகர்கள் தயக்கம் காட்டினர்.

இதனால் பொதுமக்களும் அவற்றை வாங்க மறுத்தனர். கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்து வந்தது. இதற்கிடையே, புழக்கத்தில் உள்ள பல 10 ரூபாய் நோட்டுகள் அழுக்காகவும், பழையதாகவும் இருப்பதால் அவற்றை பரிமாற்றம் செய்வது வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமமான காரியமாக இருந்துவந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்ட புதிய பத்து ரூபாய் நாணயங்கள் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் இருந்தது. இதனால் பழைய 10 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 10 ரூபாய் நாணயங்களை பரிமாற்றம் செய்ய தொடங்கினர். இருதரப்பிலும் நல்ல வரவேற்பு இருந்ததால் பத்து ரூபாய் நாணயங்களை வர்த்தகர்களும், பொதுமக்களும் அதிக அளவில் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இதனால் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 10 ரூபாய் நாணயங்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு