திருவிடைமருதூர் தாலுகாவில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர ஷெட் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் தாலுகாவில் திறந்தவெளி கிடங்காக உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர ஷெட் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள 98 கிராம ஊராட்சிகள், 5 பேரூராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி போன்ற முப்போகம் சாகுபடி செய்கின்றனர்.சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் கோடை பருவம் மற்றும் முன்பட்ட நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து சம்பா, தாளடிக்கு வயலை பதப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.திருவிடைமருதூர் தாலுகாவில் பெருமளவில் நெல் பயிர் சாகுபடி செய்யும் நிலையில் தற்போதைய குறுவை பட்டத்தில் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு 45 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை திறந்தவெளி கிடங்குகளாகவும், வாடகை கட்டிடத்திலும் இயங்குகின்றன. ரெங்கநாதபுரம், மேலையூர் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே சமீப காலமாக நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க நிரந்தர ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் திறந்தவெளியில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்துள்ளனர். மூடி வைக்கும் அளவிற்கு தார்பாய்கள் முழுமையான அளவில் இல்லை. அவ்வப்போது திடீரென மழை பெய்கிறது. மேலும் விரைவில் மழைக் காலம் தொடங்க உள்ளதால் நுகர்பொருள் வாணிபக் கழகம் நிரந்தர ஷெட் அமைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தஞ்சாவூர் அருகே முன்னையம்பட்டியில் சமீபத்தில் நெல் மூட்டைகள் வீணாகி சாக்குகள் கிழிந்து நெல் மணிகள் தரையில் கொட்டி வீணானதைபோல மற்ற கொள்முதல் நிலையங்களிலும் ஏற்படும் அபாயம் உள்ளது என்றனர்.இதுகுறித்து கோட்ட நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் இளங்கோவனிடம் கேட்டபோது, நிரந்தர ஷெட் இல்லாத கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஷெட் இல்லாத இடங்களில் 10 அடி உயரம், 7 அடி இறக்கம் கொண்ட அளவில் தற்காலிக ஷெட் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அளவின் மூலம் லாரிகளில் மூட்டைகளை ஏற்றவும் வசதியாக இருக்கும் என்றார்….

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்