திருவாரூரில் ரூ.3.70 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் தீவிரம்

திருவாரூர்: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்ற நாள் முதல், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்ப்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், சமத்துவபுர வீடுகள் போன்ற வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் நீண்ட காலத்திற்கு முன்னர் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கும், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 34 ஊராட்சிகள் இருந்து வரும் நிலையில், இதற்கான ஒன்றிய அலுவலகமானது திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வருகிறது. இந்த அலுவலக கட்டிடமானது கடந்த 1967ம் ஆண்டில் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மறைந்த முதல்வர் கருணாநிதி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் 55 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்த கட்டிடத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. அரசின் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், வீடு கட்டும் திட்டம் மற்றும் சாலை, குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக பணியாற்றி வரும் அலுவலர்கள் அனைவருக்கும் தனிதனியாக மேஜை, பீரோ மற்றும் கணினி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.3 கோடியே 70 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில், 17 ஆயிரத்து 323 சதுர அடியில் முதல் தளம் மற்றும் 2ம் தளம் என கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை