திருவாரூரில் மாவட்டத்தில் தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு-சம்பா அறுவடை பணிகள் பாதிப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பெய்த அடைமழை காரணமாக சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டதுடன் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு பணியும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.தமிழகத்தில் காற்று சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் (10ம்தேதி) முதல் இன்று (12ம்தேதி) வரையில் 3 தினங்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அதன் பின்னர் இரவு லேசான தூறல் மழை பெய்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையில் லேசான மழை தூரல் இருந்த நிலையில் அதன் பின்னர் இந்த மழையானது 8 மணி வரையில் கன மழையாக பெய்ய தொடங்கியது. அதன் பின்னரும் மாலை 6 வரையில் தொடர்ந்து அடை மழையாக பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலையோர கடைகளில் உரிய வியாபாரமின்றி சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பெய்த அடைமழை காரணமாக அறுவடை பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதுடன் ஏற்கனவே நேற்றுமுன்தினம் மற்றும் அதற்கு முன்னர் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் மற்றும் அரசு கொள்முதல் நிலையம் போன்றவற்றில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனையும் நிலை ஏற்பட்டது. இது மட்டுமன்றி தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வீடு வீடாக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.வலங்கைமான்: வலங்கைமான் தாலுகாவில் சுமார் 14,500 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த மாத இறுதியில் அறுவடை பணிகள் துவங்கியது. இருப்பினும் சுமார் 40 சதவீதம் அளவிற்கு அறுவடை பணிகள் முடிவுற்று உள்ளது இந்நிலையில் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  நேற்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சம்பா தாளடி அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது. அரசின் நேரடிக்கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்குக் கொண்டு வந்த நெல்லை மழையில் நனையாமல் பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.காலை முதலே பெய்து வரும் மழையின் காரணமாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் களை இழந்து காணப்பட்டது . டெல்டா மாவட்டங்களில் நெல் நடவு செய்தது முதல் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யும்வரை அவ்வப்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நன்னிலம்: நன்னிலம்  சுற்றுவட்டாரப் பகுதியில்  நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி முதல் லேசான சாரல் மழை இருந்தது. விடியற்காலை 4 மணி முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தற்போது நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதியில், சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் செங்கல் சூலை  பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கன மழையால்,  சம்பா சாகுபடி பாதிப்பு அடைந்துள்ளது. அறுவடை பணிகள் முற்றிலுமாக முடங்கிப் போயின. வயல்களில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் மழைநீர் தேங்கி நிற்கின்றது.  மேலும் செங்கல் சூளை மழைநீரால் பாதிப்படைந்துள்ளதுநீடாமங்கலம்: நீடாமங்கலம்,கொரடாச்சேரி பகுதியில் நேற்று முன் தினம் இரவு 1.30 மணியிலிருந்து விடாமல் சாரல் காற்றுடன்  மழை பெய்து கொண்டு இருந்தது.இதனால் சம்பா,மற்றும் தாளடி வயல்களில் தண்ணீர் நிற்பதாலும் பல இடங்களில் அறுவடைக்கு தயாரான நெல் மணிகள் தரையில் படிந்ததாலும் இயந்திர அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதே போல் சம்பா மற்றும் தாளடி அறுவடை முடிந்து விற்பனைக்கு நேரடி நெல் கொள்முதல் கொண்டு சென்ற விவசாயிகளும் நெல் மழையில் நனைந்ததால் மகசூல் இழப்பு ஏற்படும் என கவலையில் உள்ளனர்.திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வட்டாரப் பகுதிகளில் சுமார் 36,000 ஏக்கரில் கடந்த ஆண்டு விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து இருந்தனர். கடும் மழையில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு சம்பா அறுவடை கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழை அறுவடை பாதிக்கப்பட்டது. தற்போது இதில் 80 சதவீதம் சம்பா நெல் அறுவடை நடந்து முடிவடைந்த நிலையில் இன்னும் 20சதவீத அறுவடை பணிகள் மீதம் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக  மழைபெய்து வருவதால் மீதம் உள்ள 20 சதவீத அறுவடை பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்தால் தற்போதுள்ள சம்பா நெல் மழையால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மழைஅளவுதிருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு, திருவாரூர் 50.4, நன்னிலம் 45.8, குடவாசல் 51.4 ,வலங்கைமான் 30.6, மன்னார்குடி 45, நீடாமங்கலம் 63, பாண்டவையாறு தலைப்பு 62, திருத்துறைப்பூண்டி 42. 6 மற்றும் முத்துப்பேட்டை 3.2 என மொத்தம் 394 மி .மீமழையும், சராசரியாக 43.78 மி .மீ மழையும் பதிவாகியுள்ளது….

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு