திருவாடானை அருகே விவசாய திட்டங்களுக்கான உழவர் திருவிழா: வேளாண்துறை நடத்தியது

 

திருவாடானை, அக். 8: திருவாடானை அருகே வேளாண்துறை சார்பில் உழவர் திருவிழா நடைபெற்றது. திருவாடானை அருகே அரசத்தூர் ஊராட்சி, அடுத்தகுடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் லட்சிய இலக்கு வட்டார திட்டத்தின் கீழ் உழவர் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா வரவேற்றார்.

இதில், மண் மாதிரி தொழில் நுட்பம், பிரதமரின் கவுரவ நிதி திட்டம், விவசாயிகள் விதைத்தேர்வு செய்வது முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன் விதை பண்ணையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறினார். இளநிலை பொறியாளர் கணேஷ்குமார் வேளாண் பொறியியல் துறை திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.

இந்த உழவர் திருவிழாவில் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலைராஜ், சந்திரமோகன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், அரசத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் தனலெட்சுமி உழவர் உற்பத்தியாளர் குழு சம்பந்தமான திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.

இதில் தோட்டக்கலை தொடர்பான திட்டங்கள் விவசாயிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. முடிவில் பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சீத்தாலட்சுமி நன்றி கூறினார். இந்த நிகழ்வில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்னலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வேல்முருகன், ராஜேஸ்வரி, உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியசாமி, ரமணன் சதீஷ் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை