திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 4 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார்: மாஸ்க் கட்டாயம்; கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 4 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா பெருந்தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, `கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிறந்த மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் திகழ்கிறது. முதல் தவணை தடுப்பூசியை 95 சதவீதம் பேர், 2வது தவணை தடுப்பூசியை 80 சதவீதம் பேர் வரை செலுத்தியுள்ளனர். தற்போது மீண்டும் தொற்று பரவி வருவதால் முன்னெச்சரிக்கை தடுப்பூசி அவசியமாகிறது. ஆகையால் 3வது தடுப்பூசியை மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே இந்த பெருந்தொற்றை தடுக்க முடியும். மேலும் கடந்த 6 மாதங்களாக மக்களிடையே முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. வாரத்திற்கு 20 நபர்களுக்கு பரவிய தொற்று தற்போது நாளொன்றுக்கு 50 பேர் வரை பரவி வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் ஏற்கனவே கடைபிடித்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 203 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 8 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு நோயாளி மட்டும் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2368 சாதாரண படுக்கை வசதி, 253 ஐசியு படுக்கை வசதி என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 4 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது’ இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், பிரபுசங்கர், ஜெகதீசன், ராஜ்குமார் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.  …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை