திருவள்ளூர் மாவட்டத்தில் 65.61 சதவீத வாக்குப்பதிவு: பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 65.61 சதவீதம் பதிவானது. இதையடுத்து பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து வாகனங்களில் கொண்டு சென்று வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைத்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி – 1, நகராட்சிகள் – 6, பேரூராட்சிகள் – 8 ஆகியவைகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சிகள் – 74.92, நகராட்சிகள் – 68.26, மாநகராட்சி – 59.13 சதவீதம் என 65.61 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.  திருவள்ளூர் லட்சுமி மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரில் சென்று வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். அப்போது, ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வெப்பமானி பரிசோதனை செய்து, கிருமிநாசினி மற்றும் கையுறை வழங்கி பாதுகாப்புடன் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததை பார்வையிட்டார். ஆவடி: ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 350 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் – 1,54,958, பெண் வாக்காளர் – 1,57,658, திருநங்கைகள் 73 என மொத்தம் 3,12,689 பேர் உள்ளனர். வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தினர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தனர். அவர்களுக்கு போலீசாரும் வாக்குச்சாவடிமைய அலுவலர்கள் உதவினர். மேலும் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி வழங்கியதுடன் தெர்மா மீட்டர் மூலம் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. வாக்களிக்க பிளாஸ்டிக் கிளவுஸ்களும் கொடுத்தனர். அதிகாரிகள் மக்களுக்கு முறையான வழிகாட்டுதல் தரவில்லை.  இதனால் பலர் வாக்களிக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் ஒரு சில  வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் முறையாக  அமைக்கவில்லை. அதனால் அவர்களை உறவினர்கள் அவர்களை வாக்களிக்க தூக்கிச்  சென்றனர். வாக்களிக்க வந்த அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி சீட் முறையாக பலருக்கும் வழங்கவில்லை. இதனால் வாக்காளர்கள் எங்கு சென்று வாக்களிப்பது என்பது தெரியாமல் தினறினர். ஒரு சில இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.ஆவடி தொகுதி எம்எல்ஏவும் பால்வளத்துறை அமைச்சருமான சாமுநாசர், ஆவடி காமராஜர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் ஆவடியிலும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ பட்டாபிராமிலும் முன்னாள் நகர்மன்ற தலைவர் விக்டரி மோகன் திருமுல்லைவாயிலிலும் வாக்களித்தனர். மேலும் அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் டீச்சர்ஸ் காலனியிலும், முன்னாள் எம்எல்ஏ அலெக்ஸாண்டர் அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர்.இதேபோல், திருநின்றவூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு ஆண் வாக்களர்கள் 20,333, பெண் வாக்காளர் 21,177, திருநங்கைகள் 8 பேர் உள்ளனர். மொத்தம் 41,518 வாக்காளர்கள் உள்ளனர். இங்கும் காலை முதல் மாலை வரையிலும் விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 4,39240 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 102 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இங்கு திமுக, அதிமுக உட்பட 124 பேர் போட்டியிடுகின்றனர்.பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மக்கள் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமார், 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் அவரது மனைவி மாலதி ரவிக்குமார், பூந்தமல்லி முன்னாள் நகர்மன்ற தலைவர் பூவை ஞானம், 18வது வார்டில் போட்டியிடும் அவரது மனைவி நிர்மலா ஞானம், பூந்தமல்லி அதிமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன், பூவை கந்தன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.இதேபோல், திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகளில் வாக்குப்பதிவு காலையிலேயே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. அயனம்பாக்கம், கோலடி பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். திமுக சார்பில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் திருவேற்காடு நகர செயலாளர் என்.ஈ.கே.மூர்த்தி குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.  ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் மொத்தம் 10016 வாக்காளர்கள் உள்ளனர். ஊத்துக்கோட்டை  பேரூராட்சியில் பொது வார்டு 6,  ஆதிதிராவிடர் பெண் 1, ஆதிதிராவிடர் பொது 1, பெண்கள் மட்டும் 7 என 15 வார்டுகள் உள்ளது. இதில் ஒரு வார்டில் திமுக வேட்பாளர் வெங்கடேசன்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி தேர்தல் களத்தில் திமுக,  அதிமுக, பாஜ, சுயேச்சை உட்பட 59 பேர் களத்தில்  உள்ளனர்.  திமுக சார்பில் அப்துல் ரஷீத்,  குமரவேலு,  அபிராமி, சுமலதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  இதில் மாற்றுதிறனாளிகள்,  பெண்கள், இஸ்லாமிய பெண்கள்,  முதியவர்கள் ஆகியோர் ஆர்வமுடன் வாக்களித்தனர். காலை 9 மணிக்கு 12 சதவீதமும்,  11 மணிக்கு மணிக்கு 32 சதவீதமும்,  பிற்பகல் 1 மணிக்கு 50 சதவீதமும் வாக்குகள் பதிவானது.  இதில் 7வது வார்டில்  ஆந்திர மாநிலம் தாசுக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 நபர்கள் வாக்களிக்க வந்தனர். அப்போது, அவர்களை திமுகவினர் தடுத்தனர். அவர்களுக்கு அதிமுகவினர் ஆதரவு தெரித்து வாக்களிக்க செய்தனர். இதனால், திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.தகவலறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.  ஆனால், யாரும் சமரசம் ஆகாததால் அப்பகுதியில் கூட்டம் கூடியதால், லத்தியை காட்டி போலீசார் விரட்டினர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஊத்துக்கோட்டையில் உள்ள  சென்னை – திருப்பதி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பின்னர், போக்குவரத்து சீரானது.  பின்னர் 3 மணிக்கு 63 சதவீத வாக்குகளும்,  6 மணிக்கு 77.13 சதவீத வாக்குகள் பதிவானது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 10016 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7725 வாக்குகள் பதிவாகி 77.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.திருத்தணி: திருத்தணி நகராட்சியில் 40 வாக்குச்சாவடிகளில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீல்சேர் மற்றும் கைப்பிடி ஊன்றியபடி வந்து வாக்களித்தனர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, ஏஎஸ்பி சாய்பிரணீத் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு திருவள்ளூர் நகராட்சி ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 11வது வார்டுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென கோளாரானது. தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் விரைந்து வந்து சரி செய்ய முயற்சித்தார். முடியாததால், மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டது. இதனையடுத்து 50 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.ஆவடி போலீஸ் கமிஷனர் ஆய்வுஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், திருமுல்லைவாயல் எட்டியம்மன் நகர் வாக்குச்சாவடி  மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்களிக்க வந்தவர்களிடம் பாதுகாப்பு  ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பாதுகாப்பு பணியில்  இருந்த போலீசாருக்கு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அறிவுறைகளை கூறினார்.போலீசாருடன் வாக்குவாதம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் 5 மணிக்கு மேல் சாவகாசமாக வாக்களிக்க வந்தவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு சில வாக்காளர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் ஆணையம் அறிவித்தபடி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வாக்களிக்கலாம் என்றும், 5 முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் எடுத்து கூறினர். ஆனால் அதை மீறி பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனரிடம் வாக்களிக்க வந்த ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் அழைத்துச்சென்றனர். இதேபோல் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மணிக்கு மேல் வாக்களிக்கவந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் 5 மணிக்கு மேல் போலீசார் யாரையும் வாக்களிக்க அனுமதிக்காமல் வாக்குச்சாவடியின் நுழைவாயில் கதவுகளை இழுத்து மூடினர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி