திருவயலூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு

 

போச்சம்பள்ளி, ஏப்.26: பாரூர் பெரிய ஏரியில் இருந்து கால்வாய் வழியாக பெணுகொண்டாபுரம் ஏரிக்கு செல்லும் தண்ணீரை திருவயலூரில் மலர் தூவி கிராம மக்கள் வரவேற்றனர். கிருஷ்ணகிரி அணையின் நீர்தேக்கத்தில் இருந்து 15 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், கூட்டு குடிநீர் திட்டப்பணி செயல்படுத்தப்பட்டு உள்ளது. அணையின் நீர் இருப்பை 43 அடியாக குறைக்க முடிவு செய்து, கடந்த 21ம்தேதி முதல் அணையில் இருந்து விநாடிக்கு 673 கனஅடி தண்ணீர் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம் வழியாக நெடுங்கல் தடுப்பணை வழியாக செல்கிறது.

இந்நிலையில் நெடுங்கல் தடுப்பணையில் இருந்து கால்வாய் வழியாக பாரூர் ஏரிக்கு விநாடிக்கு 147 கனஅடி தண்ணீர் செல்கிறது. பாரூர் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளதால், கால்வாய் மூலம் போச்சம்பள்ளி கோணணூர் ஏரிக்கு தண்ணீர் சென்றது. தற்போது அந்த ஏரியும் நிரம்பி, திருவயலூர் கால்வாய் வழியாக புளியம்பட்டிஏரி, குண்டப்பட்டி, சமத்தூவபுரம் வழியாக பெணுகொண்டாபுரம் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இதையறிந்த புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையிலான கிராம மக்கள், திருவயல் கால்வாய் பகுதிக்கு தேங்காய் உடைத்து மஞ்சள், குங்குமம், பூக்களை தூவி தண்ணீரை வரவேற்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கிணறுகள், ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. செடி கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தீவனம் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில், கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் ஏரிகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயரும்’ என்றனர். நிகழ்ச்சியில் முனியப்பன், ராஜா, சின்னசாமி, சிவாஜி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை