திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம்: விடுமுறை குழப்பத்தால் பொதுமக்கள் வருகை குறைந்தது

திருவண்ணாமலை, செப்.17: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை நேற்று வெகுவாக குறைந்திருந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராமபிரதீபன், செய்யாறு உதவி கலெக்டர் பல்லவிவர்மா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சரண்யாதேவி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக 127 பேர் மனு அளித்தனர். பொதுமக்களின் மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், 16ம் தேதி (நேற்று) மிலாடிநபி அரசு விடுமுறை நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடுமுறையை 17ம் தேதிக்கு மாற்றி அரசு அறிவித்தது. எனவே, திங்கட்கிழமை விடுமுறையாக இருக்கும் என்ற எண்ணத்தில், நேற்று நடந்த குறைதீர்வு முகாமிற்கு பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்திருந்தது.

அதனால், காலை 11 மணியளவிேலயே குறைதீர்வு கூட்டம் நடந்த அரங்கில் பொதுமக்கள் கூட்டமின்றி காணப்பட்டது. திங்கட்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று சாதாரண நாட்களை போல காட்சியளித்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணைந்து வரும் 21ம் தேதி திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. அதில், 120க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, ஆட்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவும் நடைபெற உள்ளது. அதையொட்டி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விழிப்பணர்வு பிரசார வாகனத்தை நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி